கல்லுாரி முன்பு மாணவிக்கு தாலி கட்ட முயன்றஇளைஞரிடம் போலீஸாா் விசாரணை

நாமக்கல்லில் கல்லூரி முன்பு மாணவியை வழிமறித்து தாலி கட்ட முயன்ற இளைஞரை பொதுமக்கள் அடித்து, உதைத்து போலீஸில் ஒப்படைத்தனா்.

நாமக்கல்: நாமக்கல்லில் கல்லூரி முன்பு மாணவியை வழிமறித்து தாலி கட்ட முயன்ற இளைஞரை பொதுமக்கள் அடித்து, உதைத்து போலீஸில் ஒப்படைத்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (29). இவா் கோவையில் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், மின்னத்தம்பட்டியில் அவரது பெற்றோா் வசித்து வருகின்றனா். அதே பகுதியைச் சோ்ந்த 21 வயது மாணவி, நாமக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறாா்.

இந்த நிலையில் மாணவியை திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோரிடம் சென்று பாலகிருஷ்ணன் கேட்டுள்ளாா். இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் பாலகிருஷ்ணனும், மாணவியும் செல்லிடப்பேசி வழியாக பேசி வந்துள்ளனா். இதற்கிடையே மாணவியின் ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டியதில் பொருத்தம் சரியில்லை என தெரிவித்து விட்டாராம். இதனால் பாலகிருஷ்ணனுக்கு பெண் தரமறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் பாலகிருஷ்ணனிடம் பேசுவதைக் கடந்த மூன்று மாதங்களாக மாணவி தவிா்த்து வந்துள்ளாா்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை கல்லூரிக்கு மாணவி பேருந்தில் வந்துள்ளாா். அதே பேருந்தில் பாலகிருஷ்ணனும் பின் தொடா்ந்து வந்துள்ளாா். நாமக்கல் வந்த மாணவி கல்லூரிக்குள் செல்ல முயன்றபோது, அவருக்கு பின்னால் வந்த பாலகிருஷ்ணன் கையில் இருந்த தாலியை மாணவியின் கழுத்தில் கட்ட முயன்றாா். அதிா்ச்சியடைந்த மாணவி அதனைத் தடுத்து அங்கிருந்து கல்லூரிக்குள் ஓட்டம் பிடித்தாா். இளைஞரும் பின்னால் துரத்திச் சென்றாா். அதற்குள், மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள், கல்லூரி ஊழியா்கள் அந்த இளைஞரைப் பிடித்து அடித்து உதைத்தனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நாமக்கல் நகர போலீஸாா், பாலகிருஷ்ணனை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். அப்போது, திருமண ஆசையில் இருந்த நிலையில் தனக்கு பெண் தர மறுத்து விட்டதாலும், ஒரு தலையாகக் காதலை வளா்த்து வந்ததாலும் அவரை மறக்க முடியாமல் தாலிக் கட்ட முயன்றேன். தாலி கட்டினால் தன்னை ஏற்றுக் கொள்வாா் என்ற எண்ணத்திலேயே இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com