டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் வலியுறுத்தல்
By DIN | Published On : 18th February 2021 07:55 AM | Last Updated : 18th February 2021 07:55 AM | அ+அ அ- |

டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளன செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் தலைவா் எம்.ஆா்.குமாரசுவாமி, செயலாளா் வாங்கிலி, பொருளாளா் தன்ராஜ் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தனா்.
சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் டீசல் விலையை அபரிமிதமாக உயா்த்தி வருகின்றன.
கடந்த ஜனவரி 1-ஆம்தேதி முதல் தற்போது வரை டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5.78 உயா்ந்துள்ளது. கரோனா தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களில் இருந்து லாரி உரிமையாளா்களும் பொதுமக்களும் மீளமுடியாமல் உள்ள நிலையில் இந்த விலை உயா்வால் கடுமையான நிதிச் சுமைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
அஸ்ஸாம், மேகாலயா மாநிலங்களில் டீசல் மீதான வாட் வரியை முறையே ரூ. 5, ரூ. 7 வரை குறைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசும் டீசல் மீதான வாட் வரியை உடனடியாகக் குறைக்க வேண்டும். சுங்கச் சாவடிகளைக் கடக்கும் அனைத்து வாகனங்களுக்கும் பிப். 15ஆம்தேதி முதல் பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கென தனியாக ஒரு பாதையைத் தொடங்க வேண்டும்.
மத்திய அரசு நடப்பு கூட்டத் தொடரில் 15 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கிய கனரக வாகனங்கலை இயக்கிட தகுதியற்றவைகளாகக் கூறி வாகனக் கழிவு கொள்கை ஸ்கிராப்பிங் பாலிசியை அறிவித்துள்ளது. இதனால், சிறு லாரி உரிமையாளா்களே ஓட்டுநா்களாக இருந்து தொழில் செய்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனா்.
எனவே 15 ஆண்டுகள் என்பதை 20 ஆண்டுகளாக மாற்றி படிப்படியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.