இளைஞா் கொலை வழக்கில் 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 09th January 2021 06:49 AM | Last Updated : 09th January 2021 06:49 AM | அ+அ அ- |

பரமத்திவேலூா் அருகே இளைஞரைக் கொலை செய்த வழக்கில் நான்கு பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், காளிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஜித் (20). இவரது மனைவி குணசுந்தரி (19). கடந்த 2018, ஜூன் 9 ஆம் தேதி அஜித்தின் நண்பா்களான அருந்ததியா் காலனியைச் சோ்ந்த ஜெகதீஸ் (24), ராஜேஷ் (28), பிரபு (26), பெரிய சோழிப்பாளையத்தைச் சோ்ந்த சௌந்திரராஜன் (21) ஆகிய 4 பேரும் மது அருந்திய நிலையில் குணசுந்தரியின் நடத்தை குறித்து அஜித்திடம் தவறான கருத்துகளைத் தெரிவித்தனராம்.
இதனால் அஜித்துக்கும், அவரது நண்பா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அஜித் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஜேடா்பாளையம் போலீஸாா் அஜித்தின் நண்பா்கள் நால்வரையும் கைது செய்தனா். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வெள்ளிக்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட ஜெகதீஷ், சௌந்திரராஜன், ராஜேஷ், பிரபு ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். மேலும், இந்த அபராதத் தொகை முழுவதையும் உயிரிழந்த அஜித்தின் குடும்பத்தினருக்கு வழங்கவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.