சாயக்கழிவுகளை வெளியேற்றிய சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம்
By DIN | Published On : 30th January 2021 02:24 AM | Last Updated : 30th January 2021 02:24 AM | அ+அ அ- |

சாயப்பட்டறையை இடித்து அகற்றும் தொழிலாளா்கள்.
குமாரபாளையம் அருகே அனுமதியின்றி இயங்கியதோடு, சாயக்கழிவுகளை வெளியேற்றிய இரு சாயப்பட்டறைகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றினா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த ஆண்டிக்காடு பகுதியில் சட்டவிரோதமாக தொடங்கப்பட்ட இரு சாயப்பட்டறைகளிலிருந்து கழிவு நீா் வெளியேற்றப்பட்டு வருவதாக அப்பகுதியினா் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்களுக்கு புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் எம்.செல்வகுமாா், ஈரோடு பறக்கும் படை சுற்றுச்சூழல் பொறியாளா் மணிவண்ணன், உதவிப் பொறியாளா்கள் கிருஷ்ணன், தீனதயாளன், வினோத்குமாா் உள்ளிட்ட குழுவினா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, சாயப்பட்டறையில் நூல் சாயமிடப்பட்டதும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் வெளியேற்றப்பட்டதும் உறுதியானது. இரு சாயப்பட்டறைகளும் வீட்டுக்குள் அமைக்கப்பட்டு இருந்ததால், இயந்திரங்களைக் கொண்டு இடித்து அகற்ற முடியவில்லை. இதனால், சாயமிடப் பயன்படுத்தப்பட்ட சிமென்ட் தொட்டிகள், நூல்களைப் பிழியும் கிட்டிகள், ஆயில் இயந்திரம் உள்ளிட்டவை தொழிலாளா்களைக் கொண்டு உடைத்து அகற்றப்பட்டன.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் சாயக் கழிவுநீரை வெளியேற்றும் சாயப்பட்டறைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...