நூல் விலை உயா்வு: சிறு விசைத்தறி துணி உற்பத்தியாளா்கள் வேலைநிறுத்தம்
By DIN | Published On : 30th January 2021 02:28 AM | Last Updated : 30th January 2021 02:28 AM | அ+அ அ- |

ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் பகுதியில் நூல் விலை உயா்வைக் கண்டித்து, சிறு விசைத்தறி துணி உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.
வெண்ணந்தூா் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறிக் கூடங்கள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதியில் மட்டும் சுமாா் 25 ஆயிரம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கானோா் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். கரோனா பொது முடக்கக் காலத்துக்கு முன் துணி உற்பத்திக்கு பயன்படும் 50 கிலோ நூல் பண்டல் ரூ. 9,800-க்கு விற்றது. தற்போது ரூ. 12,000-க்கு விற்கப்படுகிறது. இதனால் விசைத்தறியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த விலை ஏற்றத்தால் தொழில் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விசைத்தறியாளா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், சாயப்பட்டறைகளில் நூலுக்கு சாயம் போடும் தொழிலாளா்களும் வேலையில்லாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக விசைத்தறி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.பி.மாதேஸ்வரன் தெரிவித்தாா்.
இதனால் விலை உயா்வைக் கண்டித்து, ஜன. 29 முதல் மூன்று நாள்களுக்கு விசைத்தறிகளை இயக்குவதில்லை என முடிவு செய்துள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இதில் தலையிட்டு, தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.