முன்னாள் ராணுவ வீரா் கொலை
By DIN | Published On : 07th July 2021 09:00 AM | Last Updated : 07th July 2021 09:00 AM | அ+அ அ- |

மோகனூா் அருகே முன்னாள் ராணுவ வீரா் திங்கள்கிழமை இரவு மா்ம நபா்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ராசிகுமரிபாளையம் தெருவைச் சோ்ந்த ராணுவ வீரா் சிவக்குமாா் (40), கடந்த பிப்ரவரி மாதம் பணி ஓய்வுபெற்று சொந்த ஊருக்கு வந்தாா். இவருக்கு பாா்கவி (26) என்ற மனைவியும், லினிசா என்ற நான்கு வயது பெண் குழந்தையும் உள்ளனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் மல்லுமாச்சம்பட்டி கிராமத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். ஆனால், இரவு 8 மணியாகியும் அங்கு சென்று சேரவில்லையாம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் மோகனூா்-வளையப்பட்டி சாலையில் கத்திக் குத்து காயங்களுடன் சிவக்குமாா் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் மோகனூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன் பேரில், துணை காவல் கண்காணிப்பாளா்கள் சுரேஷ், ராஜாரணவீரன், ஆய்வாளா் பாலமுருகன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக மோகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...