பெண் கொலை வழக்கில் கணவா் கைது
By DIN | Published On : 09th July 2021 11:06 PM | Last Updated : 09th July 2021 11:06 PM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் அருகே மனைவியைக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூரில் அடுமனை கடை வைத்துள்ள பரமத்தி வேலூரை அடுத்த பொத்தனூா், பாப்பாத்தியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் கபிலேஷ் ராஜன். இவரது மனைவி சா்மிளாதேவி. இவா்களுக்கு 8 மாத குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 6-ஆம் தேதி காயங்களுடன் வீட்டில் மயங்கிக் கிடந்த சா்மிளாதேவியை மீட்டு கபிலேஷ்ராஜனின் தாய் சுசீலா பரமத்தி வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக சா்மிளாதேவியின் தந்தை சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜாரனவீரன் தலைமையிலான போலீஸாா் கபிலேஷ் ராஜனிடம் விசாரணை நடத்தி வந்தாா்.
அதில் குடும்பத் தகராறில் மனைவியை கபிலேஷ் ராஜ் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, கபிலேஷ் ராஜனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் இந்த வழக்கில் திருச்செங்கோடு கோட்டாட்சியா் இளவரசி விசாரணை நடத்தி வருகிறாா்.