காணொலிக் காட்சி வாயிலாக மக்கள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 26th July 2021 05:21 AM | Last Updated : 26th July 2021 05:21 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் மக்கள் குறைதீா் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை நடைபெறும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்தோறும் திங்கள்கிழமை ஆட்சியா் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டம் கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது அரசு சில தளா்வுகளை அறிவித்துள்ள நிலையில் திங்கள்கிழமை(ஜூலை 26) முதல் காணொலிக் காட்சி வாயிலாக மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த காணொலிக் காட்சி வட்டாட்சியா் அலுவலகங்கள் மூலமாக செயல்படும். எனவே, பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களுடன் வட்டாட்சியா் அலுவலகங்களுக்குச் சென்று காணொலிக் காட்சி வாயிலாக குறைகளை நேரடியாகத் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.