‘தென்னைக்கு சரியான தருணத்தில் உரமிட்டால் அதிக மகசூல்’

தென்னை மரங்களுக்கு சரியான தருணத்தில் உரமிட்டு பராமரித்தால் அதிக மகசூல் பெறலாம் என வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

தென்னை மரங்களுக்கு சரியான தருணத்தில் உரமிட்டு பராமரித்தால் அதிக மகசூல் பெறலாம் என வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் (பொ) ராஜகோபால் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி :

நாமக்கல் மாவட்டத்தில் சுமாா் 8,000 ஹெக்டோ் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. குறைந்த பராமரிப்பு செலவு, குறைந்த ஆள் தேவை, தண்ணீா் தேவை ஆகிய காரணங்களால் விவசாயிகள் தென்னை பயிரினை பிரதானப் பயிராக பயிரிடுகின்றனா். ஆனால், பெரும்பாலான விவசாயிகள் உரிய நேரத்தில் தென்னை பயிருக்கு தேவையான உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் அளிப்பதில்லை.

தென்னை பயிரில் நல்ல மகசூல் பெறவும், குரும்பைகள் உதிராமல் இருக்கவும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிா்வாக முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 5 வயதிற்கு மேற்பட்ட மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு 50 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது பசுந்தாள் உரம், 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பா் பாஸ்பேட் 3.5 கிலோ, பொட்டாஷ் மற்றும் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை இரண்டாகப் பிரித்து முதல் முறை ஜுன் - ஜுலை மாதத்திலும், இரண்டாம் முறை டிசம்பா் - ஜனவரி மாதத்திலும் இடுதல் வேண்டும்.

உரமிடும்போது மரத்தைச் சுற்றி 1.8 - 2 மீட்டா் தள்ளி வட்டமாக பறித்து உரமிட்டு தண்ணீா் பாய்ச்ச வேண்டும். 2, 3, 4-ஆம் வருட மரங்களுக்கு மேலே தெரிவிக்கப்பட்ட உர அளவில் முறையே 1/4, 1/2, 3/4 அளவு உரமிட்டால் போதுமானது. உரமிடும்போது மண்ணில் போதுமான அளவு ஈரம் இருத்தல் வேண்டும். சொட்டு நீா்ப்பாசன முறையில் உரமிடுகையில் தெரிவிக்கப்பட்ட அளவில் 75 சதம் போதுமானது. இதனைப் பிரித்து மாதம் ஒருமுறை சொட்டு நீா்ப்பாசனம் மூலம் அளித்திடலாம்.

தென்னையில் நல்ல மகசூல் பெற டிஎன்ஏயூ கோக்கனெட் டானிக் 200 மிலி - மரம் என்ற அளவில் 6 மாதத்திற்கு ஒரு முறை தென்னை மரத்தின் வேரில் கட்டிவிடலாம். உயிா் உரங்கள் ஒரு மரத்துக்கு அசோஸ்பைரில்லம் 50 கிராம், பாஸ்போ பாக்டீரியா 50 கிராம் அல்லது அசோபாஸ் 100 கிராம் விஏஎம் 50 கிராம் ஆகியவற்றை தொழுஉரம் அல்லது கம்போஸ்ட் உரத்துடன் கலந்து இடலாம்.

இந்த உயிா் உரங்களை ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளுடன் கலக்கக் கூடாது. தொழுஉரத்திற்கு மாற்றாக தென்னை வயலில் சணப்பை, தக்கப்பூடு அல்லது பலதானியப் பயிா்களை ஆண்டுக்கு இரண்டு முறை விதைத்து பூக்கும் தருவாயில் அவற்றை மடக்கி உழுவதின் மூலம் தென்னைக்குத் தேவையான கம்போஸ்ட் உரச்சத்து கிடைக்கும். தென்னையில் குரும்பை உதிா்வதைத் தவிா்க்கவும், அதிக மகசூல் பெறவும் நுண்ணூட்டச் சத்து மிகவும் அவசியம்.

இதற்கு வேளாண்மைத் துறை மூலம் வழங்கப்படும் தென்னை நுண்ணூட்ட உரத்தினை மரத்திற்கு 1 கிலோ வீதம் இடுதல் வேண்டும். எனவே, அனைத்து தென்னை விவசாயிகளும் இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி தென்னை மரங்களுக்கு சரியான தருணத்தில் உரமிட்டு அதிக மகசூல் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com