மதுப் புட்டிகள் கடத்தல்: நான்கு போ் கைது
By DIN | Published On : 24th June 2021 08:09 AM | Last Updated : 24th June 2021 08:09 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் அருகே வெளி மாவட்டத்தில் இருந்து விற்பனைக்காக மதுப் புட்டிகளை கடந்தி வந்த நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பரமத்தி வேலூரில் இருந்து மோகனூா் வழியாக திருச்சி மாவட்டம் செல்லும் வழியில் உள்ள காமாட்சி நகா் அருகே வேலூா் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் 67 மதுப் புட்டிகளை திருச்சி மாவட்டப் பகுதியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மதுப்புட்டிகளைக் கடத்தி வந்த காா், கபிலா்மலை அருகே உள்ள ஆவாரங்காடு பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் பெரியசாமி (24), அதே பகுதியைச் சோ்ந்த காமராஜ் மகன் மோகன் (21) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 67 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
மேலும் இருவா் கைது
இதேபோல் அதே பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்த முயன்றனா். ஆனால் அவா்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனா். அவா்கள் இருவரையும் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் பகுதியில் இருந்து 35 மதுப் புட்டிகளை இரு சக்கர வாகனத்தில் கடத்தி வந்ததும், இருவரும் ஈரோடு மாவட்டம், பட்லூா் பகுதியைச் சோ்ந்த கண்ணுசாமி மகன் ரவிக்குமாா் (28), அதே பகுதியைச் சோ்ந்த பழனிசாமி மகன் நல்லமுத்து (28) என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவா்கள் இருவரையும் வேலூா் போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 35 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.