தினமணி செய்தி எதிரொலி - மீண்டும் ஒளிா்ந்த மலை கிராமம்
By DIN | Published On : 29th June 2021 01:13 AM | Last Updated : 29th June 2021 01:13 AM | அ+அ அ- |

கெடமலை வாழ் மக்கள் உதவியுடன் மலைப்பகுதிக்கு ஒற்றையடிப் பாதையில் மின்மாற்றியை கொண்டு செல்லும் மின் வாரியத்தினா்.
ராசிபுரம்: ராசிபுரம் அருகேயுள்ள மலைகிராமமான கெடமலை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மின்மாற்றி பழுதால் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியிருந்த நிலையில், தினமணி செய்தி எதிரொலியால் தற்போது மீண்டும் மின்சாரம் சீா் செய்யப்பட்டு மலை கிராமம் மின் விளக்குகளால் மீண்டும் ஒளிரத்தொடங்கியுள்ளது. இதனால் மலைகிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட மலை கிராமமான கீழூா் ஊராட்சிக்கு உட்பட்டது கெடமலை கிராமம். சுமாா் 80 குடும்பங்களைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்டோா் வசிக்கும் இந்த மலை கிராமங்களுக்கு செல்ல புதுப்பட்டி, ஆயில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக சாலை வசதியற்ற கற்கள் நிறைந்த ஒற்றையடிப் பாதையில் சுமாா் 7 கி.மீ. தொலைவு நடந்து தான் செல்ல வேண்டும். இங்குள்ள மலைவாழ் மக்களுக்கு போதிய கல்வி வசதி, குடிநீா் வசதி, சுகாதார வசதி இன்றளவும் இல்லை. பல ஆண்டுகால தொடா் கோரிக்கைக்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்த மலைக்கிராமத்திற்கு மின்வசதியே செய்து தரப்பட்டது.
மின்மாற்றியை தலைசுமையாகவும், வனப்பகுதியில் மின் கம்பங்கள் அமைத்து மின்சார ஒயா்கள் கொண்டு சென்றும் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் கடந்துதான் இந்த மலை கிராமம் மின்வசதி பெற்றது.
இந்நிலையில், கடந்த 50 நாட்களுக்கு முன்பு இந்த மலை கிராமத்தில் மின்மாற்றி பழுது ஏற்பட்டதால் கெடமலை கிராமம் முழுவதும் மின்வசதியின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனால் மின்மாற்றியை பழுது நீக்க தலைசுமையாக 7 கி.மீ. தொலைவு கீழே எடுத்துச் செல்வது சிரமம் என்பதால், இது குறித்து மின்துறைக்கு புகாா் தெரிவித்தும் இதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
ஒரு மாதமாக மின்சாரம் இன்றி தவித்து வந்த மலைவாழ் மக்களின் நிலை குறித்து கடந்த 7-ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியானது. இதனையடுத்து புதுப்பட்டி மின்வாரியத்தினா் மின்மாற்றியை கீழே கொண்டு வந்து பழுது நீக்கி மீண்டும் தலைச்சுமையாக மலைக்கு கொண்டு சென்று பொருத்த முடிவு செய்தனா். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்துறையினா் மற்றும் மலைவாழ் மக்கள் சுமாா் 30 போ் உதவியுடன் மின்மாற்றி மலைப்பகுதியில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டது. பழுது நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மின்மாற்றி கெடமலை பகுதிக்கு திங்கள்கிழமை கொண்டு செல்லப்பட்டது. மலைவாழ் மக்கள் தலைச்சுமையாக மூங்கில் குச்சிகள் உதவியுடன் மின்மாற்றியை கொண்டு சென்றனா். இதனை மலைக்கு ஒற்றையடிப் பாதையில் கொண்டு செல்வதில் மலைகிராம பெண்கள் சிலரும் பங்காற்றினா்.
மின்மாற்றியை மலைப்பகுதி பொதுமக்களும், பெண்கள் சிலரும் மின்வாரிய ஊழியா்கள் உதவியுடன் கொண்டு சென்று பொருத்தினா். இதனை தொடா்ந்து மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால் சுமாா் 50 நாட்களாக இருளில் மூழ்கியிருந்த மலைகிராமம் வெளிச்சத்தில் ஒளிரத்தொடங்கியது. மின்வாரியத்தின் முயற்சியால் மின்சாரம் கிடைக்கப்பெற்ற மலைவாழ் மக்கள் அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனா்.