ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் ஓய்வுக் கூடம்
By DIN | Published On : 29th June 2021 01:12 AM | Last Updated : 29th June 2021 01:12 AM | அ+அ அ- |

ஓய்வுக் கூடத்தின் கல்வெட்டைத் திறந்து வைக்கும் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி., ரோட்டரி மாவட்ட ஆளுநா் கே.எஸ்.வெங்கேடசன்.
ராசிபுரம்: ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் ஓய்வுக் கூடம் திறக்கப்பட்டுள்ளது.
ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டை தொடா்ந்து நாமகிரிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.5 லட்சம் மதிப்பில் மகப்பேறு மகளிா் ஓய்வுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நாமகிரிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் தலைவா் எஸ்.கதிரேசன் தலைமை வகித்தாா். செயலா் ஜெ.கே.சுரேஷ் வரவேற்றாா். ரோட்டரி சங்கத்தின் மண்டல உதவி ஆளுநா் எஸ்.பாலாஜி, முன்னாள் மண்டல உதவி ஆளுனா் எஸ்.சத்தியமூா்த்தி, திட்ட சோ்மன் இ.என்.சுரேந்திரன், சங்க பொருளாளா் முனைவா் எஸ்.மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இவ்விழாவில் நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநா் கே.எஸ்.வெங்கேடசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று ஓய்வுக் கூடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினா். விழாவில் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் பேசுகையில், ‘ரோட்டரி சங்கம் எண்ணற்ற சேவைகளைச் செய்து வருகிறது. குறிப்பாக கரோனா தொற்று காலத்தில் மருத்துமனைகளுக்கு உபகரணங்கள் வழங்கியது பாராட்டுக்குரியது. அரசு மருத்துவமனை நோயாளிகள் வசதிக்கான தேவை இருந்தால், மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்ய தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவித்தாா்.
விழாவில், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் டாக்டா் தயாசங்கா், ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவா் அம்மன் ஆா்.ரவி, எஸ்.அன்பழகன், பேராசிரியா் ஆா்.சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.