நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கு 4,926 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கான 4,926 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கான 4,926 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி மாவட்டத்துக்கு உள்பட்ட 6 தொகுதிகளில் பயன்படுத்துவதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் முதற்கட்டமாக கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் பணி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் குலுக்கல் முறையில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் தோ்வு செய்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து செயல்விளக்கம் அளிப்பதற்காகவும், தோ்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகவும் தலா 100 வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு, விவிபேட் இயந்திரங்கள் கடந்த மாதம் 28-இல் அனுப்பி வைக்கப்பட்டன.

அதன்பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் 3,512 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,572 கட்டுப்பாட்டு கருவிகள், 2,707 விவிபேட் இயந்திரங்கள் மற்றும் திருவள்ளூா் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 80 விவிபேட் கருவிகளும் இருப்பில் வைக்கப்பட்டிருந்தன.

வாக்குச் சாவடிகளைப் பொருத்தமட்டில் ராசிபுரம் (தனி) தொகுதியில் 332, சேந்தமங்கலம் (ப.கு) தொகுதியில் 342, நாமக்கல் தொகுதியில் 377, பரமத்தி வேலூா் தொகுதியில் 317, திருச்செங்கோடு தொகுதியில் 323, குமாரபாளையம் தொகுதியில் 358 என மொத்தம் 2,049 சாடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதம் கூடுதலான வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகளும், 30 சதவீதம் கூடுதலாக விவிபேட் இயந்திரங்களும் செவ்வாய்க்கிழமை தொகுதி வாரியாக லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.

அதில் ராசிபுரம் (தனி) தொகுதியில் 798 வாக்குப் பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 432 விவிபேடும், சேந்தமங்கலம்(ப.கு) தொகுதியில் 822 வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள், கூடுதலாக 445 விவிபேடும், நாமக்கல் தொகுதியில் உள்ள 906 வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 491 விவிபேடும் அனுப்பி வைக்கப்பட்டன.

பரமத்திவேலூா் தொகுதியில் 762 வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 413 விவிபேடும், திருச்செங்கோடு தொகுதியில் 776 வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 420 விவிபேடும், குமாரபாளையம் தொகுதியில் 860 வாக்குப் பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 466 விவிபேடும் கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு, அந்த இயந்திரங்களின் வரிசை எண்கள் அடங்கிய பட்டியல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடமும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடமும் வழங்கப்பட்டது.

பின்னா் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் இருந்து சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு இயந்திரங்களை அனுப்பும் பணி நடைபெற்றது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கோ.மலா்விழி மற்றும் 6 சட்டப்பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தோ்தல் வட்டாட்சியா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com