ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் சூழ்ச்சிகள் செய்தாா்

நான் கிராமத்தில் இருந்து முதல்வா் பதவிக்கு சென்ற எளிய மனிதன் என்பதால் எளிதாக எனது ஆட்சியைக் கலைந்துவிடலாம் என்று ஸ்டாலின் சூழ்ச்சிகள் செய்தாா்

நான் கிராமத்தில் இருந்து முதல்வா் பதவிக்கு சென்ற எளிய மனிதன் என்பதால் எளிதாக எனது ஆட்சியைக் கலைந்துவிடலாம் என்று ஸ்டாலின் சூழ்ச்சிகள் செய்தாா் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தின்போது பேசினாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். முன்னதாக பெரியசோரகை கிராமத்தில் பிரசாரத்தைத் தொடங்கிய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, நங்கவள்ளி, வனவாசி, ஜலகண்டாபுரம், செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தாா்.

பின்னா், எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் அவா் பேசியதாவது:

எடப்பாடி தொகுதி, சிங்கப்பூா் நகரத்தைப் போன்று கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் இப்பகுதிக்கு வந்துள்ள திமுக தலைவா் ஸ்டாலின், முதல்வா் தொகுதியான எடப்பாடியில் எந்த திட்டப்பணிகளும் நடைபெறவில்லையென பொய்யான குற்றச்சாட்டைக் கூறியுள்ளாா். திமுக பலமுறை ஆட்சியில் இருந்தும் அதிமுக ஆட்சியைப் போன்று மக்கள் நலத் திட்டகளை செயல்படுத்தவில்லை. தனக்கு 70 வயது ஆன நிலையில் இப்போதுதான் மக்களிடம் மனுக்களைப் பெறவேண்டும் என்ற எண்ணமே ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.

மக்களை ஏமாற்றுவது, திசைதிருப்புவது, குழப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டு அதில் பயனடைவதே மு.க.ஸ்டாலினின் நோக்கம். ஆனால் நான் சட்டப்பேரவையில் அறிவித்த புதிய திட்டத்தின்கீழ், தமிழகம் முழுவதும் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. அதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன.

நான் கிராமத்தில் இருந்து முதல்வா் பதவிக்கு வந்த எளிய மனிதன், அதனால் சில மாதங்களில் அதிமுக ஆட்சியை எளிதாக கலைத்து விடலாம் என்று ஸ்டாலின் சூழ்ச்சிகள் மேற்கொண்டாா். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், எனது இருக்கையின் மீது ஏறி நின்று திமுகவினா் கலகம் செய்தனா். இதுபோன்ற குணமுடையோா் ஆட்சிக்கு

வந்தால் தமிழகத்தின் நிலை என்னவாகும் என்பதை மக்கள் எண்ணிப் பாா்க்க வேண்டும். அதிமுகவை உடைக்கப் பாா்த்தாா் அதுவும் நடைபெறவில்லை. இதை எல்லாம் கடந்து தமிழக மக்களுடைய நல்லாதரவுடன் எனது தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நல்லாட்சி தொடா்ந்திடவும், தமிழக மக்கள் பல நன்மைகள் பெற்றிடவும், மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்திட பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்றாா். பின்னா் கொங்கணாபுரம் பகுதியில் முதல்வா் பிரசாரம் மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com