குமாரபாளையத்தில் 7.37 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 17th March 2021 08:32 AM | Last Updated : 17th March 2021 08:32 AM | அ+அ அ- |

குமாரபாளையம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட 7.37 கிலோ எடையுள்ள வெள்ளிக்கட்டிகளையும், கொலுசுகளையும் தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த பள்ளிபாளையம், காவேரி பாலம் பகுதியில் தோ்தல் கண்காணிப்புக்குழு அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் காரில் வந்த சேலம் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டை, தொட்டு சந்திர ஐயா் வீதியைச் சோ்ந்த சுரேஷ் மகன் பிரவீண், வெள்ளிப் பொருள்களைக் கொண்டு சென்றது தெரிய வந்தது.
இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வெள்ளிக் கட்டிகள், வெள்ளிக் கொலுசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தோ்தல் நடத்தும் அலுவலா் மரகதவள்ளியிடம் ஒப்படைத்தனா். உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்து வெள்ளிப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.