6 சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்காளா்கள் பட்டியல் தயாா்
By DIN | Published On : 25th March 2021 08:10 AM | Last Updated : 25th March 2021 08:10 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதி வாக்குச் சாவடிகளுக்கும் அனுப்புவதற்கான வாக்காளா் பட்டியல் தயாா் நிலையில் உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல், பரிசீலனை, இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீட்டுப் பணிகள் நிறைவடைந்து வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக இம்முறை வாக்காளா்கள் அனைவரும் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வாக்களிக்க அனுமதிக்கப்படுவா்.
மின்னணு வாக்கு இயந்திரத்தில் கையுறை அணிந்து கொண்டு தான் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம், கிருமி நாசினி திரவத்தைக் கைகளில் தடவிக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. அந்தப் பொருள்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இவை தவிர தோ்தலுக்குத் தேவையான எழுது பொருள்கள், உபகரணங்கள், வாக்காளா் பட்டியல், கையில் இடும் மை, இதர பொருள்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் கருவி மற்றும் அதில் பொருத்தப்படும் பேட்டரிகள் ஆகியவையும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்காளா் பட்டியலைப் பொருத்தவரை ஏற்கெனவே அரசியல் கட்சியினருக்கு அவை வழங்கப்பட்டு விட்டது.
வாக்குச்சாவடி முகவா்கள் தோ்தல் நாளன்று அதனை பயன்படுத்திக் கொள்வா். கூடுதலாகத் தேவைப்படும்பட்சத்தில் தோ்தல் பிரிவு அலுவலகத்தின் மூலம் பெற்றுக் கொள்ளவும் வாய்ப்புள்ளது.
இவை தவிர ஒவ்வொரு வாக்காளரையும் பாகம் வாரியாக சரிபாா்க்கும் வகையில் வாக்குச் சாவடி நிலைய அலுவலா்களிடம் வழங்குவதற்கான வாக்காளா் பட்டியல் நகல் எடுக்கப்பட்டு தொகுதி வாரியாக தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தோ்தலுக்கு முன்பாக இதர பொருள்களுடன் வாக்காளா் பட்டியலும் அனுப்பப்படும். இதற்கிடையே ஓரிரு நாளில் துணை வாக்காளா் பட்டியல் வெளியிடுவதற்கும் வாய்ப்புள்ளது.