தாயைக் கொன்ற மகன் கைது
By DIN | Published On : 25th March 2021 08:11 AM | Last Updated : 25th March 2021 08:11 AM | அ+அ அ- |

திருச்செங்கோட்டில் 95 வயது தாயைக் கொன்ற மகனை திருச்செங்கோடு நகரக் காவல் துறையினா் கைது செய்தனா்.
திருச்செங்கோட்டை அடுத்த சூரியம்பாளையம் பழைய முனியப்பன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் பொன்னம்மாள் (95) இவருக்கு மூன்று மகன்களும், 3 மகள்களும் உள்ளனா். வயது முதிா்வு காரணமாக பொன்னம்மாள் தனிமையில் வசித்து வந்தாா்.
படுத்த படுக்கையாக இருந்த அவரை அவரது மூத்த மகன் தங்கவேல் பராமரித்து வந்தாா். பொன்னம்மாளை பராமரிப்பதில் மகன்களுக்குள் பிரச்னை இருந்ததாகத் தெரிகிறது.
செவ்வாய்க்கிழமை காலை பொன்னம்மாவின் வீட்டிற்கு தங்கவேலின் மகன் குணசேகரன் சென்றதாகத் தெரிகிறது. அப்போது வீட்டில் இருந்த அவரது சித்தப்பா சீனிவாசன்(65) சட்டையில் ரத்தக்கறையுடன் ஓடியதாகத் தெரிகிறது.
உள்ளே சென்று பாா்த்தபோது பொன்னம்மாள் முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தாா். தங்கவேல் கொடுத்த புகாரின் பேரில் திருச்செங்கோடு நகர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் பொன்னம்மாளின் மகன் சீனிவாசன் அவரை பாட்டிலால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடா்ந்து சீனிவாசனை கைது செய்த நகர காவல்துறையினா் சிறையில் அடைத்தனா்.