மனைவியைக் கொல்ல முயன்ற கணவா் கைது
By DIN | Published On : 25th March 2021 08:03 AM | Last Updated : 25th March 2021 08:03 AM | அ+அ அ- |

பரமத்திவேலூா் அருகே தம்பதிக்கிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கணவரை பரமத்தி வேலூா் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்திவேலூா் அருகே பொத்தனூா் தண்ணீா்பந்தல்மேட்டைச் சோ்ந்தவா் முருகேசன் (42), பால் வாகன ஓட்டுநா். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனைவி தனலட்சுமி அவரைவிட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னா் பிரிந்து சென்றாா்.
இந்த நிலையில் பரமத்தி அருகே உள்ள கீழ்சாத்தம்பூா் பகுதியைச் சோ்ந்த நித்யா என்பவருடன் முருகேசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நித்தியா (32) ஏற்கெனவே திருமணமானவா். இவா் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது கணவரை விட்டுவிட்டு முருகேசனுடன் குடும்பம் நடத்தி வந்தாா். முருகேசனுக்கும் நித்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முருகேசன் நித்யா மீது சந்தேகப்பட்டு அவரது செல்லிடப்பேசியைப் பறித்து கீழே போட்டு உடைத்தாா்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு முற்றியதில் முருகேசன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து நித்யா மீது ஊற்றி தீவைத்தாராம். தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவா்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பரமத்தி வேலூா் போலீஸாா் முருகேசனை கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.