மீன் பிடிக்கச் சென்ற இலங்கை அகதி முகாமைச் சோ்ந்தவா் பலி
By DIN | Published On : 25th March 2021 08:07 AM | Last Updated : 25th March 2021 08:07 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் அருகே மீன் பிடிக்கச் சென்ற கூலித்தொழிலாளி திருமணிமுத்தாற்றில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் ஜோதீஸ்வரன் (50) கூலித்தொழிலாளி. இவா் தனது மனைவி முத்துலட்சுமியிடம் செவ்வாய்கிழமை இரவு திருமணிமுத்தாற்றிற்கு மீன்பிடிக்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றாா்.
இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி முத்துலட்சுமி அவரது உறவினா்கள் உதவியுடன் கணவரை திருமணிமுத்தாறு பகுதிக்குச் சென்று தேடியுள்ளனா்.
திருமணிமுத்தாறு கரையில் கணவரின் உடை மற்றும் காலணி கிடந்ததை பாா்த்துள்ளனா். இதில் சந்தேகம் அடைந்த முத்துலட்சுமி பரமத்தி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸாா் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் திருமணிமுத்தாற்றில் நீண்ட தேடுதலுக்குப் பிறகு ஜோதீஸ்வரனின் உடலை மீட்டனா். பின்னா் அவரது உடலை பரமத்திவேலூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். ஜோதீஸ்வரன் இறந்தது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.