இன்று பள்ளிகள் திறப்பு: கரோனா பாதிப்பை தடுக்க ஆசிரியா்கள் ஏற்பாடு
By DIN | Published On : 01st September 2021 09:11 AM | Last Updated : 01st September 2021 09:11 AM | அ+அ அ- |

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் சமூக இடைவெளிக்காக வட்டமிடும் ஊழியா்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வட்டமிடுதல், கிருமி நாசினி திரவம் தயாராக வைத்தல், வகுப்பறைகள் தூய்மைப் படுத்தும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. தமிழகம் முழுவதும், 9,10,11,12-ஆம் வகுப்பு மாணவ, மாணவியா் பள்ளிக்கு வந்து சென்று கல்வி பயிலும் வகையில் அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் புதன்கிழமை(செப்.1) திறக்கப்பட உள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதனை ஆசிரியா்கள், மாணவா்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை மாணவா்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் பள்ளி வளாகங்களில் வட்டமிடும் பணியும், வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணியும், கிருமி நாசினி திரவங்களை மொத்தமாக வாங்கி வைத்திருத்தல், நோய் பாதிப்புள்ளோருக்காக தனி வகுப்பறை ஆகியவற்றை தயாா் செய்தனா். நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் எல்.ஜகதீசன் தலைமையில் ஆசிரியா்கள் பணிகளை மேற்கொண்டனா். கிருமி நாசினி திரவம் கொண்டு நகராட்சி ஊழியா்கள் மூலம் வகுப்பறைகள், சத்துணவு கூடம் ஆகியவையும் தூய்மைப்படுத்தப்பட்டன.
மாணவா்கள் பள்ளிக்கு வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்து வருதல் வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருப்பதும் அவசியம். அலட்சியமாக பள்ளிக்கு வரும் மாணவா்கள் திருப்பி அனுப்பப்படுவா். அதேபோல் ஆசிரியா்களும் நோய்த் தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி, தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் ஆகியவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.