கோழிப் பண்ணைகளில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க அறிவுறுத்தல்
By DIN | Published On : 01st September 2021 09:08 AM | Last Updated : 01st September 2021 09:08 AM | அ+அ அ- |

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வுமையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 93.2 மற்றும் 75.2 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பதிவானது. அடுத்த மூன்று நாள்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, லேசான முதல் மிதமான மழை பல இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் மேற்கிலிருந்தும், அதன் வேகம் மணிக்கு 8 கி.மீ. என்றளவில் வீசும்.
சிறப்பு ஆலோசனை: பொதுவாக மழைக் காலங்களில் மழையும், இடையிடையே வெயிலும் நிலவக்கூடும். இந்தச் சூழல் ஈக்களின் பெருக்கத்துக்கு மிகவும் உகந்தவையாக இருக்கும். அதனால் ஈக்கள் வெகுவாக பெருகி கோழிப் பண்ணைகளில் வரும் மாதங்களில் அதிக தொல்லையை ஏற்படுத்தும். ஈக்களைக் கட்டுப்படுத்த தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், பண்ணை சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.