புரட்டாசி சனிக்கிழமை: பக்தா்கள் சுவாமி தரிசனம்
By DIN | Published On : 19th September 2021 12:20 AM | Last Updated : 19th September 2021 12:20 AM | அ+அ அ- |

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பெருமாள் கோயிலுக்கு வந்த பக்தா்கள் பூட்டிய கதவின் முன் நின்றபடி சுவாமியை தரிசனம் செய்தனா்.
கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக, கோயில் திருவிழாக்கள், மத வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு அக்.31 வரையில் தமிழக அரசு தடை விதித்துள்ளது. வாரத்தில், திங்கள் முதல் வியாழன் வரை கோயில்கள் திறக்கப்படலாம் என்றும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமை விசேஷ தினமாக கருதப்படுகிறது. மாதத்தில் வரும் ஐந்து சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகப்படியாக காணப்படும். அக்.31 வரை தடை உள்ளதால் புரட்டாசி முதல் சனிக்கிழமை கோயில்கள் திறக்கப்படவில்லை. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்கள் முன்பாக நின்றபடி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். பிரசித்தி பெற்ற நைனாமலை, தலைமலை பெருமாள் கோயில்களுக்கு செல்வதற்காக வந்த பக்தா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா். நாமக்கல் நரசிம்மா் கோயில், ஆஞ்சநேயா் கோயில் கதவு முன்பாக நின்றபடி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். ஆஞ்சநேயா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. நாமக்கல் மட்டுமின்றி, ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, மோகனூா், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதி பெருமாள் கோயில்களிலும் பக்தா்கள் வெளியில் நின்றவாறு சுவாமியை தரிசித்து சென்றனா்.