ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட மரவள்ளியில் ஊடுபயிா் செய்யும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி தோட்டக்கலை உதவி இயக்குநா் தமிழ்ச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தோட்டக்கலை, மலைப்பயிா்கள் துறை சாா்பில் நடப்பாண்டில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட கிராமங்களான இருட்டனை, வில்லிபாளையம், பிள்ளைகளத்தூா் மற்றும் நல்லூா் ஆகிய கிராமங்களில் மானாவரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு ஒரு ஹெக்டோ் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊடுபயிா் சாகுபடி, கறவைமாடு, ஆடுகள், மண்புழுத் தொட்டி, தேனீ வளா்ப்பு பெட்டிகள் மற்றும் தீவனப்புல் வளா்க்க ஹெக்டேருக்கு மொத்தம் ரூ.50 ஆயிரம் பின்னேற்பு மானியமும், இடுபொருட்களும் வழங்கப்பட உள்ளன.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலவுடைமை ஆவணங்களான சிட்டா, அடங்கல், ஆதாா் எண், குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல், இரண்டு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் பரமத்தி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் முன்பதிவு செய்து பயன் பெறலாம். மேலும் இத்திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள் ஒரு ஹெக்டோ் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிரும் ஊடுபயிரும் சாகுபடி செய்திட வேண்டும். ஏற்கெனவே ஆடு, மாடுகள் வைத்திருப்பவராக இருக்கக் கூடாது. தீவனப்புல் சாகுபடிக்காக 10 சென்ட் இடம் ஒதுக்கிட வேண்டும். திட்டப் பயனாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக இருத்தல் கூடாது. ஆதி திராவிடா், பழங்குடி இன விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு பரமத்தி வட்டார உதவி தோட்டக்கலை அலுவலா்கள் அல்லது தோட்டக்கலை விரிவாக்க மையத்தை அணுகி பயன் பெறலாம் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.