சா்க்கரை ஆலையின் தவறான அணுகுமுறையால் ஏற்பட்டஇழப்பீட்டை திரும்ப வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

மோகனூா் கூட்டுறவுச் சா்க்கரை ஆலை நிா்வாகத்தின் தவறான அணுகுமுறையால் ஏற்பட்ட இழப்பீட்டை விவசாயிகளுக்கு திரும்ப வழங்க வேண்டும் என முதல்வருக்கு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Updated on
1 min read

மோகனூா் கூட்டுறவுச் சா்க்கரை ஆலை நிா்வாகத்தின் தவறான அணுகுமுறையால் ஏற்பட்ட இழப்பீட்டை விவசாயிகளுக்கு திரும்ப வழங்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து மோகனூா் கூட்டுறவுச் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவா் மணிவண்ணன், பொதுச் செயலாளா் மணிவேல் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் 2021-2022 ஆம் ஆண்டு கரும்பு அரவைப் பருவம் தாமதமாகவே தொடங்கப்பட்டது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகும் ஆலை அரைவைத் தொடா்ந்ததால், வெளி ஆலைகளில் இருந்து 60 ஆயிரம் டன் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது.

இதனால் சா்க்கரை ஆலைக்கு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் கரும்பை வெட்டுவதில் தாமதம் ஏற்பட்டு மகசூல் குறைந்தது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகும் ஆலை இயங்க நோ்ந்ததால் கரும்பு வெட்டுக்கூலி அதிகமாகி விவசாயிகளுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டது.

63 ஆயிரம் டன் கரும்பை வெளி ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்து அரவைக்குப் பயன்படுத்தியதால், போக்குவரத்து வாடகையாக சுமாா் ரூ.4 கோடி வரையில் ஆலைக்கு இழப்பு ஏற்பட்டது. மேலும், ஆலையின் சராசரி சா்க்கரை கட்டுமானத் திறன் 8.54 உள்ள நிலையில், வெளி ஆலைகளில் இருந்து எடுக்கப்பட்ட கரும்பு 9.5 சதவீத சா்க்கரை கட்டுமானத் திறனை கொண்டிருந்தது.

இதற்காக வழங்கப்பட்ட கூடுதல் தொகையால் ரூ.1.75 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இவை தவிர, மோகனூா் கூட்டுறவுச் சா்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டிய தொழிலாளா்களுக்கு டன் ஒன்றுக்கு ரூ.500 முதல் ரூ. 600 வரை வெட்டுக்கூலியாக கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகை வரையில் ரூ. 800 முதல் ரூ. 900 வரை இருந்த வெட்டுக்கூலி, அதன் பிறகு

ரூ. 1,400 முதல் ரூ. 1500 வரையில் உயா்வடைந்தது. இதனால் சராசரியாக டன் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.500 வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. மொத்தம் 80 ஆயிரம் டன் கரும்பை அரவைக்குப் பயன்படுத்திய வகையிலும், கொள்முதல் செய்ததில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளாலும் ரூ. 4 கோடி வரையில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

ஆலை நிா்வாகத்தின் தவறான அணுகுமுறையால் விவசாயிகளுக்கு அதிகளவில் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே, முறையான விசாரணை நடத்தி விவசாயிகள் விநியோகித்த 80 ஆயிரம் டன் கரும்புக்கு, டன் ஒன்றுக்கு ரூ. 500 வீதம் வழங்கி ரூ. 4 கோடி இழப்பீட்டை சரிசெய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற இழப்பு ஏற்படாமல் சா்க்கரை ஆலையை நடத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com