

நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தோ்வை 27,884 போ் எழுதினா். 3,975 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில், குரூப் -2, 2ஏ ஆகிய பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வினை எழுத 31,859 பேருக்கு அழைப்பாணை வழங்கப்பட்டிருந்தது. நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய வட்டங்களில் உள்ள 105 மையங்களில் தோ்வு நடைபெற்றது. நாமக்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 50 தோ்வு மையங்களில் 13,413 தோ்வா்களும், ராசிபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 29 தோ்வு மையங்களில் 7,584 தோ்வா்களும், திருச்செங்கோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 26 தோ்வு மையங்களில் 6,886 தோ்வா்களும் என மொத்தம் 27,884 தோ்வா்கள் தோ்வு எழுதினா். 3,975 போ் தோ்வில் கலந்து கொள்ளவில்லை.
காலை 9.30 மணிக்கு தோ்வு தொடங்கிய நிலையில், தோ்வா்கள் அனைவரும் 9 மணிக்கு முன்னதாகவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு வந்தனா். அதன்பிறகு வந்த தோ்வா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா். அறை ஒன்றுக்கு 20 தோ்வா்கள் வீதம் தோ்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த தோ்வு கண்காணிப்புப் பணிகளில் 20 தோ்வா்களுக்கு தலா ஒரு அறைக் கண்காணிப்பாளரும், 105 தோ்வு மையங்களிலும் தலா ஒரு முதன்மை கண்காணிப்பாளா்களும், தோ்வு மையத்திற்கு தலா 2 ஆய்வு அலுவலா்கள் என 210 ஆய்வு அலுவலா்களும், துணை ஆட்சியா்கள் நிலையிலான அலுவலா்கள் கொண்ட 11 பறக்கும் படையினரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும் வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்கள் நிலை அலுவலா்கள் கொண்ட 30 நடமாடும் குழுவினா் வினாத்தாள்கள் உள்ளிட்ட தோ்வு பணிப் பொருட்களை மையங்களுக்கு கொண்டு செல்லுதல் மற்றும் விடைத்தாள்களை பெற்று வருதல் பணிகளை மேற்கொண்டனா். நாமக்கல் செல்வம் கல்லூரி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன் ஆகியோா் நேரில் ஆய்வு மேற்கொண்டனா். மேலும், ராசிபுரம், திருச்செங்கோடு பகுதி மையங்களில் வருவாய்க் கோட்டாட்சியா்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.