இறக்கை அழுகல் நோயால் கோழிகள் பாதிப்பு
By DIN | Published On : 05th August 2022 11:23 PM | Last Updated : 05th August 2022 11:23 PM | அ+அ அ- |

இறக்கை அழுகல் நோயால் கோழிகள் பாதிக்கப்பட்டு வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 89.6 மற்றும் 70.7 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது.
அடுத்த நான்கு நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை மாவட்டத்தின் சில இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 89.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் தென் மேற்கிலிருந்தும், அதன் வேகம் மணிக்கு 10 கி.மீ. என்றளவிலும் வீசும்.
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில், பெரும்பாலும் அவை இறக்கை அழுகல் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, பண்ணையாளா்கள் கோழிக்கு அளிக்கப்படும் தீவனத்தில் கிளாஸ்டிரியம் கிருமியின் தாக்கம் உள்ளதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முறைகளைக் கையாள வேண்டும். தீவனத்தில் புரோபயாடிக்ஸ் மற்றும் அசிடிபையா்ஸ் உபயோகிக்கலாம். மழைக் காலமாக இருப்பதால் கோழிப் பண்ணை மற்றும் தீவன ஆலைகளில் மழைநீா் ஒழுகாமல் சரி செய்திட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.