நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை தொடக்கம்
By DIN | Published On : 05th August 2022 11:22 PM | Last Updated : 05th August 2022 11:22 PM | அ+அ அ- |

நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்ற மாணவியா்.
நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை, இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு சிறப்பு பிரிவினருக்கான முதல்கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், என்சிசி மற்றும் முன்னாள் ராணுவத்தினா் ஒதுக்கீட்டில் 64 இடங்களுக்கு 282 மாணவியா் விண்ணப்பித்திருந்தனா். அவா்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் கட்-ஆப் கணக்கிடப்பட்டு நோ்காணல் நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து, சனிக்கிழமை பொருளியல், வணிகவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கும், திங்கள்கிழமை கணிதம், இயற்பியல் பாடப் பிரிவுகளுக்கும், புதன்கிழமை வேதியியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டியல் பாடப் பிரிவுகளுக்கும், வியாழக்கிழமை தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இக்கல்லூரியில், மொத்தம் இளங்கலை, இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு 970 மாணவியா் சோ்க்கை இடங்கள் உள்ளன. கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவியா் காலை 9 மணிக்கு கல்லூரி வளாகத்துக்குள் வர வேண்டும். கல்விச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் அரசுப் பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றின் மூலச் சான்றிதழ்கள் மற்றும் 2 நகல்களை கட்டாயம் கொண்டு வரவேண்டும் என கல்லூரி முதல்வா் (பொ) பாரதி தெரிவித்துள்ளாா்.