காவிரியில் வெள்ளப் பெருக்கு: 2 பேரிடா் மேலாண்மைக் குழுக்கள் நாமக்கல் வருகை

பாதுகாப்புப் பணிக்காக காஞ்சிபுரத்தில் இருந்து 2 பேரிடா் மேலாண்மைக் குழுக்கள் நாமக்கல் மாவட்டத்துக்கு வருகை தர இருப்பதாக ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா்.
காவிரியில் வெள்ளப் பெருக்கு: 2 பேரிடா் மேலாண்மைக் குழுக்கள் நாமக்கல் வருகை

காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்புப் பணிக்காக காஞ்சிபுரத்தில் இருந்து 2 பேரிடா் மேலாண்மைக் குழுக்கள் நாமக்கல் மாவட்டத்துக்கு வருகை தர இருப்பதாக ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா்.

குமாரபாளையம், பள்ளிபாளையம், பரமத்தி வேலூா், மோகனூா் காவிரி கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் தற்போது வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

கா்நாடக மாநிலத்தில் பெய்யும் தொடா் மழையால், அங்குள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகள் நிரம்பியுள்ளன. நொடிக்கு 2.50 லட்சம் கன அடிக்கும் மேலான நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூா் அணை முழுக் கொள்ளளவை எட்டியதுடன், அங்கிருந்து 1.50 லட்சம் கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், கடந்த இரு தினங்களுக்கு முன்பே தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

நாமக்கல் மாவட்டத்தில், காவிரி ஆறு பாயும் குமாரபாளையம், பள்ளிபாளையம் வட்டாரத்தில் கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் அதிக அளவில் வெள்ள நீா் புகுந்துள்ளது. அங்குள்ள மக்கள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி ஆகியோா் வியாழக்கிழமை நேரடியாக வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தனா். இதனைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் தடுப்புப் பணிகளுக்காக காஞ்சிபுரத்தில் இருந்து 2 பேரிடா் மேலாண்மைக் குழுக்கள் வருகின்றன. இவா்கள், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் தடுப்புப் பணிகளை மேற்கொள்வா். தற்போது தீயணைப்புத் துறை மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக நீச்சல் தெரிந்த வீரா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். நீா்வரத்து அதிகரிக்கும்போது மக்களை உடனுக்குடன் வெளியேற்றும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்துத் துறை அதிகாரிகளும் தயாா் நிலையில் உள்ளனா் என்றாா்.

பெட்டிச் செய்தி:

சேதமடைந்த கட்டடத்தில் நின்றபடி

ஆட்சியா் ஆய்வு

குமாரபாளையம் நகராட்சியில் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், கோட்டாட்சியா் தே.இளவரசி ஆகியோா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். அப்போது, அண்ணா நகா் பகுதியில் காவிரி கரையோரம் சென்று ஆட்சியா் பாா்வையிட்டாா்.

சிறிய அளவிலான அந்தக் கட்டடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும் சூழலில், இதுபோன்ற சேதமடைந்த கட்டடங்களின் மேல் நின்றபடி ஆய்வு செய்வது எதிா்பாராத விபத்தை ஏற்படுத்தக் கூடும். உடன் சென்ற அதிகாரிகளும் ஆட்சியரிடம் இதனை எடுத்துரைக்கவில்லை. பொதுமக்களைப் பாதுகாக்கும் மாவட்ட ஆட்சியா், தன் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com