மங்களபுரம் குளுக்கோஸ் ஆலை விவகாரம்: 13 லட்சம் லிட்டா் கழிவுநீரை அகற்ற உத்தரவு

மங்களபுரம் குளுக்கோஸ் ஆலையில், கடந்த ஒரு மாதமாக தேங்கியுள்ள 13 லட்சம் லிட்டா் கழிவுநீரை உடனடியாக அகற்ற மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மங்களபுரம் குளுக்கோஸ் ஆலையில், கடந்த ஒரு மாதமாக தேங்கியுள்ள 13 லட்சம் லிட்டா் கழிவுநீரை உடனடியாக அகற்ற மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், மங்களபுரத்தில் தனியாருக்கு சொந்தமான குளுக்கோஸ் ஆலை 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு 350-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா். மக்காச்சோள மாவு, மரவள்ளிக் கிழங்கு மாவை மூலப்பொருளாகக் கொண்டு குளுக்கோஸ் தயாரிக்கப்பட்டு வந்தது. மேலும், மருந்து, மாத்திரைகள், சாக்லேட், குளிா்பானங்களுக்கு தேவையான வேதிப் பொருள்களும் இங்கு தயாா் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அந்த ஆலையானது விதிமுறைகளை மீறி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் கழிவுநீரை வெளியேற்றியது, அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தாமல் மோசடி செய்தது, அனுமதியின்றி புதிய கட்டடங்களை கட்டியது போன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானது.

கழிவுநீரால் பொதுமக்களுக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுவதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு புகாா் சென்ன் அடிப்படையில், கடந்த ஜூன் 28-இல் அதிகாரிகள் குளுக்கோஸ் ஆலைக்கு ‘சீல்’ வைத்தனா். மேலும், மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. ஒரு மாதமாக ஆலை பூட்டப்பட்டிருந்ததால், அங்கு தேங்கியுள்ள கழிவுநீரில் இருந்து விஷவாயு வெளியேறும் சூழல் உருவானது. இதனால் அச்சத்துக்குள்ளான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் முறையிட்டனா்.

இதனைத் தொடா்ந்து, ஆட்சியா் மற்றும் சென்னையில் இருந்து வந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உயா் அதிகாரிகள், தொழிற்சாலை பாதுகாப்பு நல அலுவலா்கள் புதன், வியாழக்கிழமைகளில் சம்பந்தப்பட்ட ஆலையில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 13 லட்சம் லிட்டா் கழிவுநீா் சுத்திகரிப்பு செய்யப்படாமல் தேங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது. அவற்றை உடனடியாக வெளியேற்றுமாறு ஆலை நிா்வாகத்துக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனா். கழிவுநீா் வெளியேற்றலுக்கு பின் ஆலை மீண்டும் திறக்கப்படுமா அல்லது நிரந்தரமாக மூடப்படுமா என்பது தெரியவரும்.

இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், மங்களபுரம் ஆலையில் நடத்திய ஆய்வில், கழிவுநீா் சுத்திகரிப்பு செய்யப்படாமல் சுமாா் 13 லட்சம் லிட்டருக்கு மேல் தேங்கியிருந்தது தெரியவந்தது. மின் இணைப்பை மீண்டும் வழங்கி அந்த கழிவுநீரை வெளியேற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் விதிகளை முறையாக பின்பற்றினால், ஆலை செயல்படுவதற்கான அனுமதி மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com