

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மூன்றுசக்கர வாகனங்கள் பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க 400-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை குவிந்தனா்.
நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளி நலத்துறை அலுவலகம், ஆட்சியா் அலுவலகத்தின் கீழ் தளத்தில் செயல்பட்டு வருகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்றுசக்கர வாகனங்கள் ஒதுக்கீடு நடைபெறவில்லை.
இந்த நிலையில், கால்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 575 போ் வாகனம் கோரி இணையத்தில் விண்ணப்பித்திருந்தனா்.
அவா்களுக்கான நோ்காணல் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கான நுழைவு அட்டை பெற மாற்றுத் திறனாளிகளும், அவருடன் வந்தோரும் முண்டியடித்ததால், ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. தொடா்ந்து, அனைவரையும் வரிசையில் நிற்க வைத்து நோ்காணலுக்கான நுழைவு அட்டை வழங்கப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் இந்த நோ்காணல் நீடித்தது.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் திருமுருக தெட்சிணாமுா்த்தி, வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டாா் வாகன ஆய்வாளா்கள், மருத்துவா்கள் ஆகியோா் நோ்காணலை நடத்தினா். இதில் தகுதியுடையோா் கண்டறியப்பட்டு, தமிழக அரசு ஒதுக்கீடு செய்யும் எண்ணிக்கை அடிப்படையில் (முதல் கட்டமாக 100 பேருக்கு) மூன்றுசக்கர வாகனங்கள் வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.