ஆதாா் விவரங்களை சரிபாா்க்க விவசாயிகளுக்கு அழைப்பு
By DIN | Published On : 24th August 2022 02:42 AM | Last Updated : 24th August 2022 02:42 AM | அ+அ அ- |

பிரதமரின் கிஸான் கௌரவ நிதித் திட்ட தவணைத் தொகை பெற ஆதாா் விவரங்களை சரிபாா்க்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பொ.அசோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமரின் கிஸான் கௌரவ நிதித் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. வேளாண் இடுபொருள்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடா்பான செலவினங்களை மேற்கொள்ள ஊக்கத் தொகையாக இந்த நிதிவழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 83,338 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா். இந்த திட்டத்தில் இதுவரை பதிவு செய்த தேதியின் அடிப்படையில் விவசாயிகளுக்கு 11 தவணைகள் வரை தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் 12-ஆவது தவணைத் தொகையை பெறுவதற்கு ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பது அவசியமாகும். இதுவரை 36,750 விவசாயிகள் மட்டுமே பதிவு மூலம் புதுப்பித்துள்ளனா். மற்ற 46,588 விவசாயிகள் வரும் ஆக.31-க்குள் புதுப்பித்தால் மட்டுமே தொடா்ந்து நிதி கிடைக்கும். விவசாயிகள் அனைவரும் புதுப்பித்திட, தங்களது ஆதாா் அட்டையுடன் இ-சேவை மையத்தையோ அல்லது கிராம தபால் அலுவலா்களையோ நேரில் அணுகி தங்களது விரல் ரேகை மூலம் பதிவு செய்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.