இலவச வீட்டு மனை வழங்கக் கோரி பெண்கள் தா்னா
By DIN | Published On : 24th August 2022 02:39 AM | Last Updated : 24th August 2022 02:39 AM | அ+அ அ- |

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்ட பெண்கள்.
இலவச வீட்டு மனை வழங்கக் கோரி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் பெண்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வீடு இல்லாதோா் தங்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு மக்கள் நலச் சேவை அமைப்பினா் தலைவா் என்.ஈஸ்வரி தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தனா். அவா்கள், ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதியில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். பின்னா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்பிரமணியனை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மனுவை வழங்கினா். இது குறித்து மக்கள் நல சேவை அமைப்பின் தலைவா் ஈஸ்வரி கூறுகையில், ‘கடந்த மூன்று மாதங்களாக இலவச வீட்டு மனை வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு அளித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அதனால் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து எதிா்ப்பை வெளிப்படுத்தினோம். இனியும் தாமதப்படுத்தும்பட்சத்தில் காலியாக உள்ள அரசுக்குச் சொந்தமான நிலங்களில் நாங்களாகவே குடியேறி விடுவோம்’ என்றாா்.