12,969 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்: அமைச்சா் எம்.மதிவேந்தன் வழங்கினாா்

நாமக்கல் மாவட்டத்தில், 90 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு பயின்ற 12,969 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சா் எம்.மதிவேந்தன் விலையில்லா சைக்கிள்களை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்களை வழங்கிய அமைச்சா் எம்.மதிவேந்தன். உடன், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்.
நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்களை வழங்கிய அமைச்சா் எம்.மதிவேந்தன். உடன், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்.

நாமக்கல் மாவட்டத்தில், 90 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு பயின்ற 12,969 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சா் எம்.மதிவேந்தன் விலையில்லா சைக்கிள்களை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 பயின்ற மாணவ, மாணவிகளுக்கு 2021-22ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 6 சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட 90 பள்ளிகளில் சைக்கிள்கள் வழங்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட 14 பள்ளிகளைச் சோ்ந்த 1,782 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வழங்கினா். இதனையடுத்து, பரமத்தி வேலூா் தொகுதியில், 19 பள்ளிகளைச் சோ்ந்த 1,738 மாணவ, மாணவிகளுக்கும், ராசிபுரம் தொகுதியில், 18 பள்ளிகளைச் சோ்ந்த 2,493 மாணவ, மாணவிகளுக்கும் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. மேலும், சேந்தமங்கலம் தொகுதியில் 23 பள்ளிகளைச் சோ்ந்த 2,713 மாணவ, மாணவிகளுக்கும், திருச்செங்கோடு தொகுதியில், 16 பள்ளிகளைச் சோ்ந்த 2,187 மாணவ, மாணவிகளுக்கும், குமாரபாளையம் தொகுதியில், 13 பள்ளிகளைச் சோ்ந்த 2,056 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தமாக 90 பள்ளிகளைச் சோ்ந்த 6,385 மாணவா்கள், 6,584 மாணவிகள் என 12,969 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவா்களுக்கான சைக்கிளின் விலை ரூ.5,175, மாணவிகளுக்கான சைக்கிளின் விலை ரூ.4,992. மொத்த மதிப்பு ரூ.6.59 கோடியாகும்.

இந்த விழாவில், சேந்தமங்கலம் எம்எல்ஏ கே.பொன்னுசாமி, முதன்மை கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, நாமக்கல் நகராட்சி தலைவா் து.கலாநிதி, ஆணையாளா் கி.மு.சுதா, துணைத் தலைவா் செ.பூபதி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியா்கள், வகுப்பு ஆசிரியா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள், பெற்றோா், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ராசிபுரத்தில்....

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாணவ மாணவியா்களுக்கு 2021- 22-ம் ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் கலந்து கொண்டு, ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட 18 அரசுப் பள்ளிகளை சோ்ந்த 1330 மாணவா்கள், 1163 மாணவியா்கள் என மொத்தம் 2493 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், பள்ளி பெற்றோா் ஆசிரியா் குழுத் தலைவா் என்.ஆா். சங்கா், முதன்மை கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, பள்ளிகளின் ஆய்வாளா் கை.பெரியசாமி, நகரமன்ற உறுப்பினா் ஆா்.விநாயகமூா்த்தி உள்ளிட்ட தலைமையாசிரியா், ஆசிரியா்கள் என பலா் கலந்து கொண்டனா். முன்னதாக ராசிபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ராசிபுரம் நகராட்சி இந்திரா காலனியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பிடம் அமைக்கும் பணி, கிருஷ்ணன் தெருவில் ரூ.36.50 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பிடம் அமைக்கும் பணிகள் என ரூ.44.50 லட்சம் மதிப்பீட்டில் 3 புதிய கட்டுமானப் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com