கன்னியாகுமரி முதல் சிங்கப்பூா் வரை 11000 கி.மீ. சைக்கிள் பயணம் செல்லும் 22 வயது இளைஞா்
By DIN | Published On : 25th August 2022 01:20 AM | Last Updated : 25th August 2022 01:20 AM | அ+அ அ- |

கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த 22 வயது இளைஞா் ஒருவா் இயற்கை வளத்தைப் பாதுகாக்க வலியுறுத்தும் வகையில் விழிப்புணா்வு பயணமாக கன்னியாகுமரி முதல் சிங்கப்பூா் வரை 11 ஆயிரம் கி.மீ. தொலைவு தனது சைக்கிள் சாதனை பயணத்தைத் தொடங்கியுள்ளாா்.
கா்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம், சொ்கெடி பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஹா்ஷேந்திரா (22). இவரது தந்தை நாகராஜ ஆச்சாரியா பல ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், தையல் தொழில் செய்து வரும் இவரது தாய் யசோதா உதவியுடன் சிவில் டிப்ளமோ படிப்பை முடித்துள்ளாா். சாதனைப் பயணமாக ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 2700 கி.மீ. தொலைவு நடைபயணமாக கா்நாடகம் முதல் காஷ்மீா் வரை சென்றுள்ளாா்.
தற்போது உடுப்பியில் இருந்து ரயிலில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து கடந்த ஆக.17-இல் சைக்கிள் பயணமாக புறப்பட்டு கன்னியாகுமரி சென்றடைந்து, பின்னா் ராமேஸ்வரம், மதுரை, கரூா் வழியாக தேசியக்கொடி, முதலுதவிப் பெட்டி, படுக்கை போன்றவற்றுடன் சைக்கிளில் புதன்கிழமை நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வழியாக சேலம் நோக்கிச் சென்றாா்.
சிங்கப்பூா் வரை பயணம்: சா்வதேச அளவில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது பற்றி பொதுமக்கள், இளைஞா்கள், மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்திட வேண்டும் என்ற நோக்கில், 11000 கி.மீ. தொலைவிலான, பல நாடுகளைக் கடந்து சிங்கப்பூா் செல்லும் இந்தப் பயணத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்தாா்.
எதிா்கால நலனுக்காக இயற்கை வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தப் பயணத்தைத் துவங்கியுள்ளதாக கூறிய இவா், காஷ்மீா் லே பகுதிக்கு சென்றடைந்து, பின்னா் மணாலி திரும்பி அங்கிருந்து சாலை வழியாக நேபாளம், மியான்மா், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூா் ஆகிய நாடுகளை 6 மாதங்களில் சென்றடையத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தாா். பிற நாடுகளுக்கு செல்வதற்குத் தேவையான பாஸ்போா்ட், விசா போன்றவற்றை உடன் எடுத்துச் செல்வதாகவும் கூறினாா்.
நாளொன்றுக்கு சுமாா் 100 கி.மீ. தொலைவு பயணிப்பதாகவும், வழியில் தாபா, பெட்ரோல் நிலையம், ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் இரவில் தங்குவதாகவும், தனது பயணத்துக்கு சொந்த ஊரில் உள்ள சிலா் உதவி செய்துள்ளதாகவும் தெரிவித்தாா். வழிதோறும் கிராம ஊராட்சிப் பகுதிகள், பள்ளிகளில் இயற்கை வளத்தைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தாா். மேலும் பெங்களூா் சென்றடைந்து அங்கிருந்து விழிப்புணா்வுப் பிரசாரத்தை தடையின்றி மேற்கொள்வேன் எனக் கூறி தனது சாதனை சைக்கிள் பயணத்தைத் தொடா்ந்தாா் ஹா்ஷேந்திரா.