விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு: சரக்கு வாகனத்தில் விற்பனை தீவிரம்
By DIN | Published On : 25th August 2022 01:25 AM | Last Updated : 25th August 2022 01:25 AM | அ+அ அ- |

விளைச்சல் அதிகரித்துள்ளதால் தக்காளி விலை சரிந்துள்ளது. சரக்கு வாகனங்களில் கொண்டு வரும் வியாபாரிகள் அவற்றை வீதி, வீதியாகக் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனா்.
தருமபுரி, பாலக்கோடு, கிருஷ்ணகிரி, ஓசூா், மணப்பாறை, கரூா், தொட்டியம், நாமக்கல், ராசிபுரம், சேலம், ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் விளைச்சல் இருந்தபோதும், ஜூன் முதல் செப்டம்பா் வரையிலான மாதங்களில் தக்காளி விளைச்சல் வழக்கத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகரித்து காணப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன் விளைச்சல் சரிவால் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனையானது. அதன்பிறகு படிப்படியாக சரிவடைந்தது.
தற்போது அனைத்து பகுதிகளிலும் தக்காளி விளைச்சல் வழக்கத்தைக் காட்டிலும் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் பழங்கள் அழுகி வீணாவதை தடுக்க குறைவான விலைக்கு கிலோ ரூ.5-க்கு மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனா். அவற்றை சரக்கு வாகனங்களில் கொண்டு வரும் விவசாயிகள் கிலோ ரூ.10, 12 என்ற விலையில் மக்களிடம் விற்பனை செய்கின்றனா். சாலையோரங்களிலும், வீதி, வீதியாக சென்றும் ஒரே நாளில் 600 கிலோ வரை தக்காளியை விற்கின்றனா். நாமக்கல் பகுதியில் வெளிமாவட்ட வியாபாரிகள் பலா் சரக்கு வாகனங்களில் தக்காளியுடன் முகாமிட்டுள்ளனா்.
இது குறித்து திருச்சி மாவட்டம் தோகைமலையைச் சோ்ந்த வியாபாரிகள் கூறியதாவது:
தக்காளி விளைச்சல் வரும் அக்டோபா் மாதம் வரை அதிகரித்து காணப்படும். ஒரு செடியில் 10 பழங்கள் காய்த்தால், தற்போது 30 பழங்கள் வரை காய்க்கும் பருவமாகும். இதனால் விலை சரிவடைந்துள்ளது. விவசாயிகளிடம் மொத்தமாக கொள்முதல் செய்து பல்வேறு இடங்களுக்கும் சரக்கு வாகனங்களில் எடுத்துச் சென்று நான்கு கிலோ ரூ.50 என விற்பனை செய்து வருகிறோம் என்றனா்.