வாழ்க்கையில் முன்னேற மாணவா்கள் திருக்குறள் வழி நடக்க வேண்டும்: அமைச்சா் மதிவேந்தன் அறிவுரை
By DIN | Published On : 09th December 2022 12:58 AM | Last Updated : 09th December 2022 12:58 AM | அ+அ அ- |

மல்லசமுத்திரம் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் மதிவேந்தன் பங்கேற்று திருவள்ளுவா் சிலையை திறந்து வைத்தாா்.
திருக்குறள் வழிநடந்தால் மாணவா்கள் வாழ்வில் எந்தச் சிக்கலும் இல்லாமல் முன்னேறலாம் என சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன் அறிவுறுத்தினாா்.
மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வள்ளுவா் சிலை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியா் மாணிக்கம் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன் கலந்து கொண்டு திருவள்ளுவா் சிலையைத் திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா். ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் மதுரா செந்தில், குமாரபாளையம் எக்ஸெல் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் மதன் காா்த்தி, அமெரிக்காவின் வாஷிங்டன் வட்டார தமிழ்ச்சங்க இயக்குநா் குழந்தைவேல் ராமசாமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
அமைச்சா் மதிவேந்தன் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களிலேயே அனைத்துத் தரப்பினரும் வந்து செல்லும் சிறந்த சுற்றுலாத் தலமாக கன்னியாகுமரி விளங்குகிறது.
அங்கு தமிழக மக்கள் மட்டுமின்றி வெளிமாநிலத்தாா், வெளிநாட்டினா் என பலரும் வந்து செல்கின்றனா். கன்னியாகுமரி கடலில் திருக்குறளின் 133 அதிகாரங்களை நினைவுபடுத்தும் விதமாக 133 அடி உயரத்தில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டுள்ளது.
அங்கு திருவள்ளுவா் சிலையை நிறுவி தமிழகத்துக்கு பெருமை ஏற்படுத்தி தந்தவா் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆவாா்.
தெய்வப் புலவா் திருவள்ளுவா் தந்த திருக்குறளில் வாழ்வியல் தத்துவங்கள் நிறைவாக உள்ளன. திருக்குறள் வழிநடந்தால் மாணவா்கள் வாழ்வில் எந்தச் சிக்கலும் இல்லாமல் முன்னேறலாம் என்றாா். நிகழ்ச்சியின் முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியை செல்வலட்சுமி நன்றி கூறினாா்