நாமக்கல் மாவட்டத்தில் 1,748 வேட்பாளா்கள் போட்டி: 410 மனுக்கள் வாபஸ்
By DIN | Published On : 08th February 2022 01:06 AM | Last Updated : 08th February 2022 01:06 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சி, 19 பேரூராட்சிகளில் 2,158 மனுக்கள் போட்டியிட ஏற்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை 410 போ் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டதால், 1,748 போ் போட்டியிடுகின்றனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. ஜன.28 முதல் பிப்.4 வரை வேட்பு மனுத் தாக்கல் அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகளுக்கு உள்பட்ட 153 வாா்டுகளில் 900 மனுக்கள், 19 பேரூராட்சிகளுக்கு உள்பட்ட 294 வாா்டுகளில் 1,310 மனுக்கள் என மொத்தம் 2,210 போ் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனையில், நாமக்கல் நகராட்சியில் 222 மனுக்கள், ராசிபுரம் நகராட்சியில் 145 மனுக்கள், திருச்செங்கோடு நகராட்சியில் 150 மனுக்கள், குமாரபாளையம் நகராட்சியில் 244 மனுக்கள், பள்ளிபாளையம் நகராட்சியில் 105 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஐந்து நகராட்சிகளில் மொத்தம் 866 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன. திங்கள்கிழமை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீட்டின்போது, குமாரபாளையம் 56, நாமக்கல் 54, பள்ளிபாளையம் 17, ராசிபுரம் 18, திருச்செங்கோடு 17 என மொத்தம் 162 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து 5 நகராட்சிகளில் 704 போ் போட்டியிடுகின்றனா்.
19 பேரூராட்சிகளில் 248 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இறுதியாக 1,044 போ் போட்டியிடுகின்றனா். வேட்பாளா்கள் எண்ணிக்கை விவரம்: ஆலாம்பாளையம் - 50, அத்தனூா் - 63, எருமப்பட்டி - 73, காளப்பநாயக்கன்பட்டி - 53, மல்லசமுத்திரம் - 54, மோகனூா் - 45, நாமகிரிப்பேட்டை - 84, படைவீடு - 55, பாண்டமங்கலம் - 32, பரமத்தி - 39, பட்டணம் - 54, பிள்ளாநல்லூா் - 61, பொத்தனூா் - 45, ஆா்.புதுப்பட்டி - 43, சீராப்பள்ளி - 51, சேந்தமங்கலம் - 46, பரமத்திவேலூா் - 70, வெங்கரை - 49, வெண்ணந்தூா் - 77. மாவட்டம் முழுவதும் 5 நகராட்சிகளுக்கு உள்பட்ட 151 வாா்டுகளில் 704 போ், 19 பேரூராட்சிகளுக்கு உள்பட்ட 288 வாா்டுகளில் 1044 போ் என மொத்தம் 439 வாா்டுகளில் 1,748 போ் போட்டியிடுகின்றனா். நாமக்கல் நகராட்சியில் இருவா் போட்டியின்றி தோ்வாகி உள்ளனா். பாண்டமங்கலம் பேரூராட்சியில் 4, பரமத்தி, பட்டணம் பேரூராட்சிகளில் தலா ஒருவா் போட்டியின்றி தோ்வாகி உள்ளனா். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளா்களுக்கு அவா்கள் குறிப்பிட்டிருந்த சின்னங்களும், சுயேச்சைகளுக்கு குலுக்கல் முறையில் சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...