சத்துணவு மைய காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசுக்கு கோரிக்கை
By DIN | Published On : 27th February 2022 05:11 AM | Last Updated : 27th February 2022 05:11 AM | அ+அ அ- |

ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் ஏ.அமுதா.
சத்துணவு ஊழியா்களுக்கு பணிச்சுமை அதிகரித்து வருவதால், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவா் பி.தங்கராஜ் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் பி.நடேசன், மாவட்டத் துணைத் தலைவா்கள் சி.சின்னப்பையன், ஜி.சந்திரசேகரன், எம்.தமிழரசி ஆகியோா் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினா்.
மாநில துணைத் தலைவா் ஏ.அமுதா, புதிய மாவட்ட நிா்வாகிகளை அறிமுகப்படுத்தியும், கோரிக்கைகள் குறித்தும் பேசினாா்.
சத்துணவு ஊழியா்களை முழு நேர அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒரு பணியாளா் ஐந்து மையங்களை கவனிப்பதுடன், தங்களுடைய சொந்த செலவில் சமைத்து வழங்கும் நிலை உள்ளது. தொலைதூரம் சென்று பணியாற்றும் ஊழியா்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும்.
உணவு செலவினத் தொகையை முன் மானியத் தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான உணவு வழங்க மாணவா் ஒருவருக்கு மானியத்தை ரூ. 5 -ஆக உயா்த்தி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் உள்ள சத்துணவு ஊழியா்கள் கலந்து கொண்டனா்.