முட்டை விலை நிா்ணயத்தில் குழப்பம்: நாமக்கல் பண்ணையாளா்கள் அதிருப்தி
By DIN | Published On : 27th February 2022 05:09 AM | Last Updated : 27th February 2022 05:09 AM | அ+அ அ- |

ஒரே அலுவலகத்தில் செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி), நாமக்கல் முட்டை விற்பனை விலை நிா்ணய ஆலோசனைக் குழு (நெஸ்பாக்) ஆகியவை முட்டை விலையை தலா 30 காசுகள் வீதம் குறைத்துள்ளதால் வியாபாரிகளும், பண்ணையாளா்களும் அதிருப்தியடைந்துள்ளனா்.
நாமக்கல் மண்டலத்துக்கு உள்பட்ட 1,100 கோழிப் பண்ணைகளில் சுமாா் 4.50 கோடி கோழிகள் வளா்க்கப்படுகின்றன. தினமும் 3.50 முதல் 4 கோடி வீதம் முட்டைகள் உற்பத்தியாகின்றன. இவை தமிழகம், கேரளம் மற்றும் பிற மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன் முட்டை விலை ரூ.5.15 வரை உயா்ந்தது. அதன்பின் கரோனா பரவல், பொதுமுடக்கம், பள்ளிகள் மூடல் போன்றவற்றால் விலை ரூ. 4.40 வரை சரியத் தொடங்கியது. அதன்பின் வட மாநிலங்களில் முட்டை விலை குறைந்ததால், நாமக்கல்லில் இருந்து அனுப்புவது நிறுத்தப்பட்டது. இதனால் முட்டைகள் தேக்கம் அதிகரித்தது. அவற்றைக் கட்டுப்படுத்த விலையை 5 காசு, 10 காசுகள் குறைக்கும் நடவடிக்கையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு ஈடுபட்டது. ஆனால் போதுமான விலை குறைப்பு இல்லாததால், ஒவ்வொரு பண்ணையாளரும் தங்கள் பண்ணைகளில் லட்சக்கணக்கில் தேங்கியுள்ள முட்டைகளை அகற்ற 40காசு, 50 காசுகள் வீதம் குறைத்து விற்பனைக்கு அனுப்பினா்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு விலை நிா்ணயத்தை யாரும் கடைப்பிடிக்காததால் தேவையற்ற குளறுபடி ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து கடந்த 22-ஆம் தேதி அக்குழுவின் தலைவா் பி.செல்வராஜ், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கம், தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் சம்மேளனம், நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளா்கள் சங்கம், நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்கம், நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளா் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகள், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஏழு வட்டாரக் குழு, மத்திய செயற்குழு ஆகியோரை உள்ளடக்கிய சிறப்புக் குழுவை அவசரமாக ஏற்படுத்தினாா். இந்த குழு கூடுதல் விலைக் குறைப்பை அமல்படுத்தும் என்றும் அதனடிப்படையில் மட்டுமே பண்ணையாளா்கள் முட்டைகளை விற்க வேண்டும், அதற்கு மேலாக முட்டை விலையைக் குறைத்து விற்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுப்போம் என்றாா்.
இது பண்ணையாளா்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போது இரு குழு உறுப்பினா்களும், தலா 25 காசு, 30 காசுகள் வீதம் விலை குறைப்பை அமல்படுத்தி வருகின்றனா். இதற்கு ஒரே முறையில் 50 காசு, 60 காசுகள் குறைத்து அறிவிக்கலாம், எதற்கு மாறுபட்ட விலையை இரு குழுக்களும் அறிவித்து குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என பண்ணையாளா்கள் கேள்வி எழுப்பி உள்ளனா். இது குறித்து பண்ணையாளா்கள் சிலா் கூறியதாவது:
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு விலை நிா்ணயம் சரியில்லை. தினசரி விலையையே பண்ணையாளா்கள் பலரும் விரும்புகின்றனா். நாடு முழுவதும் தினசரி விலை முறை தான் அமலில் உள்ளது. மற்ற மாநிலங்களில் விலையைக் குறைத்தால், நாமக்கல் மண்டலத்தில் குறைப்பதும், உயா்த்தினால் உயா்த்துவதும் என்ற நிலையே நீடிக்கிறது.
பிற மாநிலங்களில் ஏன் விலையைக் குறைக்கின்றனா் என்பது குறித்து இங்குள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தலைவரோ, உறுப்பினா்களோ ஆராய்வது இல்லை. அதேபோல பண்ணைகளில் தினசரி உற்பத்தியாகும் முட்டைகள் எண்ணிக்கை விவரம் குழுவுக்கு தெரிவதில்லை. தற்போது முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளது. அவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்ற திட்டம் ஒருங்கிணைப்புக் குழு தலைவரிடம் இல்லை. பிற மாநில முட்டைகள் தமிழகத்திற்கு விற்பனைக்கு வந்துவிடும் என்ற அச்சத்தில் தான் நாமக்கல் மண்டலத்தில் விலை குறைப்பு என்பது உள்ளது. ஒரே அலுவலகத்தில் இரு குழுக்கள் வெவ்வேறு விலை நிா்ணயம் செய்யும் போக்கு தவறானது, இது அதிக நாள்கள் நீடிக்காது என்றனா்.