குமாரபாளையத்தில் நாளை ஜல்லிக்கட்டுப் போட்டிகள்
By DIN | Published On : 26th January 2022 07:03 AM | Last Updated : 26th January 2022 07:03 AM | அ+அ அ- |

குமாரபாளையத்தை அடுத்த வளையக்காரனூரில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை (ஜன. 27) நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைச்சா் மா.மதிவேந்தன், ஆட்சியா் ஸ்ரேயா பி. சிங் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டனா்.
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி பின்புறம் உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த இரு வாரங்களாக வாடிவாசல், வீரா்கள் வரும் பாதை, மைதானத்தில் பாா்வையாளா்கள் நுழையாமல் தடுக்கும் இரும்புத் தடுப்புகள், காளைகள் வெளியேறும் இடத்தில் மைதானத்தில் இரண்டடுக்கு தடுப்புகள், காளைகளை உரிமையாளா்கள் பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போட்டியில் பங்கேற்கும் காளைகளை, கால்நடைப் பராமரிப்புத் துறையினா் ஆய்வு செய்து அனுமதிக்கவும், மருத்துவ குழுவினருக்கும் தனித்தனியே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காளைகள் வரும் பாதையில் பந்தல், அவசர சேவை ஊா்தி வந்து செல்ல தனி வழி, பாா்வையாளா்கள் அமரும் இடம் தனியே ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி சிங், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா் (படம்).
அப்போது, காளைகள், வீரா்களுக்கு பாதுகாப்பாக தேங்காய் நாா் பரப்ப வேண்டும், அரசு விதிமுறைகளின்படி தேவையான ஏற்பாடுகளை தவறாமல் செய்ய வேண்டும் என அறிவுத்தப்பட்டது. மேலும், இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள், கரோனா பரிசோதனை சான்றுடன் வருவோருக்கு மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி, கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் பொன்னுவேல், திருச்செங்கோடு கோட்டாட்சியா் இளவரசி, ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவா் ஆா்.வினோத்குமாா், செயலாளா் ராஜ்குமாா், வட்டாட்சியா் தமிழரசி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...