ராசிபுரம் இறைச்சிக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அலுவலா்கள் சோதனை
By DIN | Published On : 17th July 2022 05:51 AM | Last Updated : 17th July 2022 05:51 AM | அ+அ அ- |

மீன் விற்பனைக் கடையில் சோதனை நடத்தும் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா்கள்.
ராசிபுரம் பகுதியில் மீன், கோழி போன்ற இறைச்சிக் கடைகளில் சுகாதாரமற்ற முறையில், ரசாயனக் கலவை கலந்து உணவுப் பொருள்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலா்கள் திடீா் சோதனை நடத்தினா்.
ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கோழி, மீன் இறைச்சிக் கடைகளில் ரசாயனக் கலவை கலந்து பழைய இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் நலக்குழு புகாா் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள மாதா கோயில் அருகில் உள்ள மீன்கடையில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அலுவலா்கள் கடையில் பழைய மீன்களும், பழைய எண்ணெயில் பொறித்த மீன்கள் விற்கப்படுகிா என வெள்ளிக்கிழமை நடத்தினா். மேலும் சுகாதாரமற்ற வகையில் தயாரித்து, சுவையை கூட்டுவதற்கான ரசாயன மசாலா கலவை கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிா என்றும் சோதனை நடத்தினா். இதேபோல பல்வேறு கடைகளிலும் சோதனை நடத்தி மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச்சென்றனா். ‘இறைச்சிக் கடைகளில் சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனப் பொருட்களை சோ்க்கக் கூடாது. உணவுத் தர நிா்ணயச் சட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்’ என்று அறிவுறுத்தினா்.