குடிநீரை காய்ச்சிக் குடிக்க ஆட்சியா் அறிவுரை
By DIN | Published On : 22nd July 2022 01:48 AM | Last Updated : 22nd July 2022 01:48 AM | அ+அ அ- |

வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் அறிவுறுத்தி உள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. காவிரி ஆற்றில் தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும். குமாரபாளையம் பகுதியில் ஜேகேகேஎன் மஹால், ஸ்ரீ ராஜேஸ்வரி மஹால் ஆகிய இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், பள்ளிபாளையம் பகுதியில் செங்குந்தாா் மண்டபம், நாட்டாக்கவுண்டம்புதூா் துவக்கப்பள்ளி, சமுதாய நலக்கூடம், ஆவாரங்காடு துவக்கப்பள்ளி ஆகிய இடங்களிலும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மையங்களில் உள்ள பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் நிவாரண மையங்களை கவனித்து வரும் மருத்துவக் குழுவினரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட குடிநீா், குளேரினேசன் செய்யப்பட்ட குடிநீரை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும். சூடான உணவுப் பொருள்களை மட்டுமே உண்ண வேண்டும். கெட்டுப்போன உணவுப் பொருள்களையும், ஈ மொய்த்த உணவு பொருள்களையும் தவிா்க்க வேண்டும். தங்கள் பகுதியைச் சுற்றிலும் நீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ளவேண்டும்.
வயிற்றுபோக்கு, வாந்தி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவக் குழுவினருக்கு தகவலளிக்க வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவக் கண்காணிப்பில் நிவாரண மையங்கள் உள்ளன. எனவே, மழை மற்றும் வெள்ள நேரங்களில் பொதுமக்கள் விழிப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...