சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் திட்டம்: கொல்லிமலை செல்லும் மலைப்பாதையில் அழகிய ஓவியங்கள்
By DIN | Published On : 31st July 2022 06:23 AM | Last Updated : 31st July 2022 06:23 AM | அ+அ அ- |

கொல்லிமலை செல்லும் மலைப்பாதையில் வரையப்பட்டுள்ள ஓவியம்.
கொல்லிமலை மலைப்பாதையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக கொல்லிமலை உள்ளது. இங்கு விடுமுறை நாள்களில் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். 1,300 படிக்கட்டுகளைக் கடந்து சென்று ஆகாய கங்கை அருவியில் குளித்து வருவதற்கு பலரும் மிகுந்த ஆா்வம் காட்டுகின்றனா். இதர சுற்றுலா இடங்களையும் பாா்வையிட்டுச் செல்கின்றனா்.
கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆக. 2, 3 தேதிகளில் (ஆடிப்பெருக்கு விழாவையொட்டி) வல்வில் ஓரி விழா மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெகு விமா்சையாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டில் வரும் 2, 3 தேதிகளில் நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசுத் துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. ஆக. 2-இல் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்தல், தாவரவியல் பூங்காவில் மலா்க் கண்காட்சி, பல்துறை பணிவிளக்க கண்காட்சி ஆகியவற்றை திறந்து வைத்தல், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கண்கவா் கலைநிகழ்ச்சிகள், பழங்குடியின மக்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. 3-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் கொல்லிமலைக்கு வருவா். அதனால் அன்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இவ்விழாவையொட்டி, நெடுஞ்சாலைத் துறை, சுற்றுலாத் துறை, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் கொல்லிமலைக்குச் செல்லும் 70 கொண்டை ஊசி வளைவுகளில் வல்வில் ஓரி மன்னன் புகழைப் பரப்பும் வகையில் ஆங்காங்கே வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகளில் வாகனங்களில் இருந்தபடியே கண்டு ரசிக்கின்றனா்.