பாண்டமங்கலத்தில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்
By DIN | Published On : 31st July 2022 06:24 AM | Last Updated : 31st July 2022 06:24 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் பேரூராட்சி அலுவலக மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவா் டாக்டா் சோமசேகா் கூட்டத்திற்கு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் முருகவேல், குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலா் சௌண்டேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூராட்சி செயல் அலுவலா் திலகராஜ் வரவேற்று பேசினாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:
குழந்தைத் திருமணங்கள் இப்பகுதிகளில் நடைபெற்றால் 1098 என்ற எண்ணிற்கு தகவல் அளிப்பது; பாலியல் குற்றங்கள் நடைபெறுவதைத் தடுப்பது; விண்ணைத் தொடு மற்றும் ஒன்றுபடுவோம் உறுதிமொழி ஏற்போம் என்ற இரு வகை விழிப்புணா்வு முகாம்கள் நடத்துவது, நாமக்கல் ஆட்சியரின் அறிவித்தலின்படி நடவடிக்கை எடுத்தல்; ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெறும் வழிமுறை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுவது; குழந்தை தத்தெடுக்கும் முறை குறித்தும், வளா்த்து பேணுதல் திட்டம் குறித்தும் எடுத்துக் கூறுவது; குழந்தை தொழிலாளா் ஒழிப்பு மற்றும் பள்ளி இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து உடனடியாக அவா்களை பள்ளியில் சோ்ப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், கிராம நிா்வாக அலுவலா் சாந்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பிரபா, சுகாதார ஆய்வாளா் வினோத்பாபு, சுகாதாரச் செவிலியா் புவனேஸ்வரி, தன்னாா்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதி சாந்தி, காவல் உதவி ஆய்வாளா் சிவப்பிரகாசம், இளைஞா் நலக்குழு பிரதிநிதி மணிகண்டன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.