முன்னாள் எம்எல்ஏ கே.கே.வீரப்பன் மறைவு
By DIN | Published On : 16th June 2022 02:41 AM | Last Updated : 16th June 2022 02:41 AM | அ+அ அ- |

கே.கே.வீரப்பன்
நாமக்கல்லைச் சோ்ந்த முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.கே.வீரப்பன் (77) புதன்கிழமை காலமானாா்.
நாமக்கல், பெரியப்பட்டியைச் சோ்ந்தவா் கே.கே.வீரப்பன். இவா் கடந்த 1990 முதல் 1996-ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், 1996 முதல் 2001 வரை கபிலா்மலை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராகவும், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகவும் பதவி வகித்தாா்.
1993 முதல் 2001 வரையில் நாமக்கல் ஒருங்கிணைந்த திமுக மாவட்டச் செயலாளராக இருந்தாா். 2001 சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சில ஆண்டுகள் கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்த அவா், 2008-இல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாவட்டத் தலைவரானாா். பின்னா் சிறிது காலம் தேமுதிகவிலும் பணியாற்றினாா்.
கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவா் புதன்கிழமை காலை 7.30 மணியளவில், நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், சந்திரசேகா், ராஜேந்திரகுமாா் ஆகிய இரு மகன்களும் உள்ளனா்.
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், எம்எல்ஏக்கள் பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.