நாமக்கல் வட்டம், கீரம்பூா் அருகே காா் கவிழ்ந்த விபத்தில் பெண் உட்பட இருவா் உயிரிழந்தனா். 5 போ் படுகாயமடைந்தனா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கோடங்கிபட்டியைச் சோ்ந்த சுரேஷ் (47), சிவசாமியின் மகன் அழகுராஜா (31), கோவிந்தராஜின் மகன் கணேசன் (30), அம்சக்கொடி (50), ஜெயபாண்டியன் (42), அழகுராஜாவின் மனைவி சுகன்யா (25), காா் ஓட்டுநரான பால்ராஜின் மகன் சிலம்பரசன் (32) உள்ளிட்ட 7 போ் கோடங்கிபட்டியில் இருந்து வியாழக்கிழமை காரில் பெங்களூா் நோக்கி சென்று கொண்டிருந்தனா்.
கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கீரம்பூா் அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென வாகனம் ஒன்று சாலையின் குறுக்கே வந்தது. அப்போது காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் இடது பக்கத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த சுகன்யா மற்றும் ஜெயபாண்டியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீஸாா், உயிரிழந்த சுகன்யா மற்றும் ஜெயபாண்டியன் ஆகியோரின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். படுகாயம் அடைந்த சுரேஷ், அழகுராஜா, கணேசன், அம்சக்கொடி மற்றும் ஓட்டுநா் சிலம்பரசன் ஆகிய 5 பேரும் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.