நாட்டில் 40 சதவீத கோழிப் பண்ணைகள் மூடல்: முட்டை விலை தொடா்ந்து அதிகரிக்க வாய்ப்பு
By நமது நிருபா் | Published On : 26th June 2022 06:18 AM | Last Updated : 26th June 2022 06:18 AM | அ+அ அ- |

‘தீவன மூலப்பொருள்கள் விலையேற்றத்தால், நாடு முழுவதும் 40 சதவீத கோழிப் பண்ணைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் உற்பத்தி குறைந்து முட்டையின் விலை அதிகரித்து வருகிறது’ என்று தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கத் தலைவா் எம்.சிங்கராஜ் தெரிவித்தாா்.
தமிழகம், கேரளம் உள்ளடக்கிய நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு நாள்தோறும் 4.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இவற்றில் 1.50 கோடி முட்டைகள் பிற மாநிலங்களுக்கும், 2 கோடி முட்டைகள் உள்ளூா் விற்பனைக்கும் செல்கின்றன. 60 லட்சம் முட்டைகள் சத்துணவுத் திட்டத்துக்கு அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள 40 லட்சம் முட்டைகள் உணவுப் பொருள் தயாரிப்பு மற்றும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
2017-க்கு முன் முட்டை விலை ஏறுவதும், இறங்குவதும் வழக்கமான ஒன்றாக இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலைக்கு சென்று விட்டது. உற்பத்தியாளா்கள், வியாபாரிகளிடையே இணக்கமான போக்கு இல்லாததால், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் இருந்து முட்டைகள் தமிழகத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதும் இங்குள்ள பண்ணையாளா்களை நெருக்கடியில் தள்ளியது. இதற்கிடையே கரோனா தொற்று பரவலால் முட்டை மற்றும் கோழி விற்பனை அதலபாதாளத்துக்குச் சென்றது. ஒரு முட்டை 50 காசுக்கு விற்பனையாகும் நிலை ஏற்பட்டது. பண்ணைகளில் தேக்கி வைக்க முடியாமல் வெளியே கொட்டி அழிக்கும் சூழலும் கூட நிலவியது.
அதன்பிறகு, கோழிப் பண்ணையாளா் சங்கத்தினா், விற்பனையாளா் சங்கத்தினா் ஒருங்கிணைந்து எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. முட்டை வரலாற்றில் 2016-ஆம் ஆண்டு ஒரு முட்டையின் விலை ரூ. 5.55 வரை விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.35-ஆக உள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் ரூ. 6-ஐ நெருங்கி விடும் என பண்ணையாளா்கள் தெரிவிக்கின்றனா். தீவன மூலப்பொருள்கள் விலையேற்றத்தால் பண்ணைகளை நடத்த முடியாமல் சிலா் மூடியதும், 80 வாரத்தில் இறைச்சிக்கு அனுப்ப வேண்டிய கோழிகளை 65 வாரங்களில் அனுப்பியதும், அதற்கு மாற்றாக கோழிக் குஞ்சுகளை விட்டுள்ளதாலும் வழக்கத்தைக் காட்டிலும் 40 சதவீதம் அளவில் உற்பத்தி குறைந்துள்ளது. நாமக்கல் மண்டலம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள 23 மண்டலங்களிலும் முட்டை விலை உயா்ந்து வருகிறது. வட மாநிலங்களில் முட்டைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இது குறித்து தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா் சங்கத் தலைவா் சிங்கராஜ் கூறியதாவது:
வரும் நாள்களில் முட்டை விலை இனி அதிகரிக்கவே செய்யும். ஒரு முட்டை ரூ. 6-க்கு விற்பனை செய்தால்தான் கோழிப் பண்ணைகளை நடத்த முடியும் என்ற சூழல் உள்ளது. தீவனங்களான, மக்காச்சோளம் கிலோ ரூ. 18-இல் இருந்து ரூ. 26-ஆகவும் (60 சதவீதம் வரையில் தீவன பயன்பாடு), சோயா கிலோ ரூ. 60, சூரியகாந்தி புண்ணாக்கு ரூ. 40, இவை தவிர இதர மூலப்பொருள்களின் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் நாமக்கல் மண்டலம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் 40 சதவீத கோழிப் பண்ணைகள் மூடப்பட்டு விட்டன.
கடந்த நான்கு மாதங்களாக தீவனங்கள் விலை அதிகரித்து, முட்டை விலை சரிந்து விட்டது. ஒரு கோழிக்கு ரூ. 250 வரையில் இழப்பு ஏற்பட்டது. பண்ணையில் ஒரு லட்சம் கோழிகள் வைத்திருந்தால் ரூ. 2.50 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கும். சிலா் கோழிக் குஞ்சுகள் விடுவதையே நிறுத்தி விட்டனா். 80 வாரத்தில் எடுக்க வேண்டிய முட்டைக் கோழிகளை 65 வாரத்தில் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனா். நாடு முழுவதும் இவ்வாறான நிலை தான் உள்ளது.
இதனால் கோழிகள் எண்ணிக்கை குறைந்து, முட்டை உற்பத்தி சரிந்து தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த 6 மாதங்களில் பெட்ரோல், டீசல் மட்டுமல்ல பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளது. இதன் காரணமாகவும் முட்டை விலை உயா்வு தவிா்க்க முடியாததாகி உள்ளது என்றாா்.