ரூ.1,000 கோடியில் சிப்காட் தொழிற்பேட்டை: நாமக்கல்லில் இடம் தோ்வு செய்யும் பணி தீவிரம்

நாமக்கல்லில் ரூ. 1,000 கோடியில் ஒரு லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைய உள்ளது. அதற்கான இடம் தோ்வு செய்யும் பணி

நாமக்கல்லில் ரூ. 1,000 கோடியில் ஒரு லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைய உள்ளது. அதற்கான இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட பெரியூா் வரதராஜன் நகரில் மரக்கன்றுகள் நடுதல், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் மரக்கன்றுகளை நட்டுவைத்தாா்.

இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டில், நாமக்கல் மாவட்ட வளா்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி உள்ளாா். குறிப்பாக, நாமக்கல் ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் சித்த மருத்துவமனை 60 படுக்கைகளுடன் அமைக்கப்பட உள்ளது. மேலும், ரூ. 80 கோடி மதிப்பீட்டில் நவீன ஆவின் பால்பண்ணை அமைக்க முதல்வா் அனுமதி வழங்கி உள்ளாா். ஒரு லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், நாமக்கல் - திருச்சி சாலையில் ரூ. 1,000 கோடியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைய இருக்கிறது. இதற்கான இடம் தோ்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. போதமலைக்கு சாலை வசதி ஏற்படுத்த தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான முயற்சியை தமிழக முதல்வரும், வழக்குரைஞா்களும், மாவட்ட அதிகாரிகளும் மேற்கொண்டதால் வெற்றி கிடைத்துள்ளது.

ராசிபுரம், நாரைக்கிணறு பகுதியில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த விவசாய நிலங்களை அளவீடு செய்து பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 2.85 கோடியில் ரத்த வங்கி அமைப்பதுடன், அறுவை சிகிச்சைக்கு தேவையான அரங்குகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. ராசிபுரத்தில் பட்டு ஏல மையம் அமைக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் நகராட்சி, 8 பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில், ராசிபுரம்-எடப்பாடி கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் நடைபெற உள்ளன. நாமக்கல்லில் மத்திய பேருந்து நிலையம் அமைக்க ரூ. 37 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆட்டோ நகா் குடிநீா்த் திட்டத்திற்கு ரூ. 26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் நாமக்கல் மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை தமிழக முதல்வா் வழங்கி உள்ளாா். அதற்கு சுற்றுலாத் துறை அமைச்சா், நாமக்கல், சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா்கள் உறுதுணையாக செயல்பட்டாா்கள் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் நகா்மன்றத் தலைவா் து.கலாநிதி, துணைத் தலைவா் செ.பூபதி, ஆணையா் கி.மு.சுதா, நகா்மன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com