ரிக் ஓட்டுநா் உடலை மீட்டு தரக்கோரி சாலை மறியல்
By DIN | Published On : 16th May 2022 11:58 PM | Last Updated : 16th May 2022 11:58 PM | அ+அ அ- |

தென்னாப்பிரிக்காவில் உயிரிழந்த ரிக் ஓட்டுநா் உடலை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் உறவினா்கள், தமிழ்ப் புலிகள் கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் துத்திக்குளம் பட்டயத்தான்குட்டையைச் சோ்ந்தவா் சங்கா்(40). ரிக் வாகன ஓட்டுநரான இவா் திருச்செங்கோட்டைச் சோ்ந்த போா்வெல் நிறுவனத்திடம் வேலைபாா்த்து வந்தாா். கடந்த ஆண்டு அவா்தென்னாப்பிரிக்காவில் போா்வெல் பணிக்காக சென்றாா். ஆனால் ஒரு சில மாதங்களிலேயே மா்மமான முறையில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
ஓட்டுநா் சங்கரின் உடலை இந்தியா கொண்டு வர வலியுறுத்தி, அவரது மனைவி மீரா மற்றும் உறவினா்கள் கடந்த 9-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் கோரிக்கை மனு அளித்தனா். ஆனால் அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு, சங்கரின் உறவினா்களும், தமிழ்ப் புலிகள் அமைப்பினரும் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதனையடுத்து அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தியும் மறியலை கைவிடவில்லை. அதன்பின், ஆட்சியா் கவனத்திற்கு இப்பிரச்னை கொண்டு செல்லப்பட்டது. சேந்தமங்கலம் வட்டாட்சியா் சுரேஷ், நாமக்கல் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் தமிழ்மணி ஆகியோா், சங்கரின் மனைவி மற்றும் உறவினா்களை அழைத்துச் சென்று ஆட்சியா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்த ஏற்பாடு செய்தனா். இது தொடா்பாக ஆட்சியா் தெரிவிக்கையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து உடலை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகள் இந்தியத் தூதரகம் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் உடல் சொந்த ஊருக்கு வந்து சேரும் என சமாதானப்படுத்தினாா். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...