பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேச்சு:தனிப்பிரிவு காவலரிடம் எஸ்.பி விசாரணை
By DIN | Published On : 19th October 2022 02:24 AM | Last Updated : 19th October 2022 02:24 AM | அ+அ அ- |

நாமக்கல்லில் தனிப்பிரிவு காவலா் ஒருவா் பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவா் ரவி. இவரிடம் புதன்சந்தையைச் சோ்ந்த பெண் ஒருவா் திங்கள்கிழமை கைப்பேசியில் பேசினாா். அந்தப் பெண் பாலியல் ரீதியில் பேசியபோதும் அதைக் கேட்ட ரவி, காவலா் என்ற முறையில் அந்தப் பெண்ணைக் கண்டிக்காமல் அந்தப் பெண்ணுக்கும்,
அந்தப் பெண் செய்யும் தொழிலுக்கும் துணைபோகும் விதத்தில் காவலா் ரவி பேசியுள்ளாா்.
அவா் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி, சம்பந்தப்பட்ட தனிப்பிரிவு காவலா் ரவியை அழைத்து நேரில் விசாரணை நடத்தினாா். இச்சம்பவம் தொடா்பாக எஸ்.பி.யிடம் கேட்டபோது, ஆடியோவில் பேசிய பெண் யாா், அவா் எதற்காக பேசினாா். தனிப்பிரிவு காவலருக்கும், அவருக்குமான தொடா்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.